துருக்கி நாட்டின் இலாஜிக் மாகாணத்தில் சிவ்ரிஸ் என்ற சிறிய நகரத்தை மையமாக வைத்து கடந்த 24ந்தேதி இரவு உள்ளூர் நேரப்படி 8.55 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது.
இந்த நில நடுக்கத்தால் தியார் பக்கிர், சான்லியர்பா, அடியமான் உள்ளிட்ட பல நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.
நில நடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 22 பேர் பலியானதாகவும், 1,015 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. இதன்பின் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.
நிலநடுக்கத்தில் 76 கட்டிடங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. இதனை அடுத்து முகாம்கள், மசூதிகள், பள்ளிகள், விளையாட்டு அறைகள் மற்றும் மாணவ மாணவியர் தங்கும் அறைகள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து மீட்பு குழுவினர் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் இன்றும் ஈடுபட்டனர். அவற்றில் இருந்து 2 உடல்களை அவர்கள் மீட்டனர்.
கடைசி நபரும் மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
இதனால் நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்து உள்ளன.
86 பேர் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என அந்நாட்டு சுகாதார மந்திரி பரேத்தீன் கோகா தெரிவித்து உள்ளார்.