சென்னையில் பொதுமக்கள் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்கள் படுத்து உறங்கிகொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இரவும் சாலையோரம் வசிக்கக்கூடிய மக்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது சுமார் 9 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் மீது ஆய்வகத்தில் பயன்படுத்தக்கூடிய ஆசிட் பாட்டிலை வீசியுள்ளார். பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
ஆசிட் பாட்டில் உடைந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் என 5 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இதில் ஒரு குழந்தைக்கு மட்டும் அதிகளவில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அங்கிருந்த மக்களுக்குக் கண் எரிச்சல் மற்றும் மிகுந்த நெடி பரவியிருக்கிறது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இடத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு அல்லது வேறு யாருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் பரபரப்பான சாலையில் அருகே நடந்த இந்தச் சம்பம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.