தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உச்சமடைந்து வெற்றியை அண்மிக்கும் போதெல்லாம் , இந்திய உளவுப்பிரிவு (Research analysing wing ) தனது கைவரிசையைக் காட்டத் தவறியதில்லை என்பது வரலாறு. திம்புப்பேச்சுவார்த்தை தொடக்கம் முள்ளிவாய்க்காய்கால், உச்ச இனவழிப்புக் காலத்தில் கடற்கலங்களினுள் நடைபெற்ற சந்திப்புகள் வரை , தேசியத்தலைவரின் நேரடி வழிநடாத்தலில் , இந்திய உளவுப்பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட, தமிழீழ தேசத்திற்கு எதிரான சகல நகர்வுகளையும், தமிழீழ தேசம் முறியடித்திருந்தது.
தேசியத்தலைவர் அவர்களின் தீர்க்கதரிசனமும் , தூரநோக்குப் பார்வையும் தமிழர் தேசத்தைக் காத்துநின்றது, இன்றும் பாதுகாத்து , கவசமாக நிற்கிறது. முதலில் இறுதி யுத்தம் என முள்ளிவாய்க்கால் போரை விழிப்பதை தமிழர்கள் நாம் அனுமதிக்கக் கூடாது. அங்கு நடந்தது தமிழீழ மீட்பிற்கான பல போர்களில் ஒன்று அவ்வளவுதான். குறிப்பாக என்றுமில்லாத பேரழிவுகளையும் ஈகங்களையும் தொட்டுநின்றது என்றால் மிகையாகாது.
தமிழீழம் என்னும் எம்முயிர் தேசத்தை மீட்கும்வரையும் போர்களிற்கு குறைவுமிருக்காது, முடிவும் இருக்காது. இறுதி யுத்தம் என விழிப்பவர்கள், ஒன்றில் அறிவிலிகள் அல்லது வீரஞ்செறிந்த போரியல் நகர்வினூடான விடுதலையை விரும்பாதவர்கள்.
தமிழீழ மீட்பிற்கான போரியல் முடிவை அல்லது தொடர்ச்சியை தீர்மானிக்கும் மாபெரும் சக்தி அல்லது அதிகாரம் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களிற்கும் தேசியத்தலைவரின் சிந்தனைக்கும் மட்டுமே உள்ளது. மாறாக இந்த இரண்டு மாபெரும் சக்திகளிற்கும் முரணாக முடிவுகளையும் தீர்மானங்களையும் யார் எடுக்க நினைத்தாலும் அது படுதோல்வியிலேயே முடியும். 2009 மே 18 ற்கு பின்னரான வரலாறு சொல்லும் பாடமும் இதுதான்.
கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சிந்தனை, தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பாதையை தூய்மைப்படுத்தி தன்வழி செல்லும். அதுவே வரலாறு காட்டும் பாதை. தற்போதய சூழலில் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வழித்தட வரைபடத்தை உள்ளடக்கியுள்ள தேசியத்தலைவரின் சிந்தனையையும், மாவீரர்களின் தியாகத்தையும், வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றையும் முற்றாகத் துடைத்தழிப்பதே சிங்களப் பேரினவாதத்திற்கும், தென்னாசியப் பிராந்திய வல்லரசிற்கும் அத்தியாவசியமானது.
இதற்கான முன்னெடுப்புக்களை இரு சக்திகளும் கனகச்சிதமாக நகர்த்தி முன்னெடுத்து வருகின்றன. தமிழீழ விடுதலை விரும்பிகளாக தம்மைக்காட்டிக் கொண்டு ஊடகப்பரப்பில் , தமிழீழ தேசக்கோட்பாட்டை அழிப்பதற்கு துணைபோகிறவர்கள் சற்று நின்று நிதானிக்க வேண்டும் .
அவர்களுடைய பிள்ளைகள் உள்ளிட்ட எதிர்காலச் சந்ததிக்கும் சேர்த்தே அவர்கள் படுகுழியை தோண்டுகிறார்கள். தேசியத்தலைவரின் சிந்தனை அவர்களை மன்னிக்காது. தங்கள் பாதையை அவர்கள் செப்பனிட வேண்டிய காலமிது. காலத்திற்குக் காலம் , சிறிலங்கா தேசம் தங்களின் கையை மீறிப் போகும் போதெல்லாம் RAW கையிலெடுக்கும் மூலோபாயத்தையே இப்போதும் எடுத்துள்ளது.
தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசுத்தன்மையையும், பாதுகாப்பையும், பொருளாதார, இராசதந்திர நலன்களையும் பேணிப்பாதுகாப்பதே RAW வின் பணி, அதனை அது செம்மையாகச் செய்கிறது. அதன் தேவைகளிற்காக , தமிழீழ விடுதலை என்னும் சீரிய நோக்கில் பயணித்த சில தாயக புலம்பெயர், அமைப்புகளை, ஊடகவியலாளர்களை மடைமாற்றியுள்ளார்கள்.
சிறிலங்கா விரைவில் பிராந்திய வல்லரசின் வழிக்கு வந்துவிடும், அதன்பின்னர் அவர்களும் சிறிலங்காவும் , எப்போதும் போல நெருங்கிய நண்பர்கள்தான். ஆனால் துணைபோன தமிழர்கள் கழற்றி விடப்படுவார்கள். காலம் மீண்டும் தமிழர்கள் சிலரையும், அமைப்புகள் சிலவற்றையும் துரோகிகள் பட்டியலில் இணைக்கும். அமைப்புகளின் பெயர்கள் ,ஊடகவியலாளர்களின் விபரங்கள் இப்போது தணிக்கையிலுள்ளது. ஆனால் எப்போதும் அப்படி இருக்காது . தாயகத்தில் ஏற்கனவே தமிழ்பேசும் மக்கள் என்றவகையில் முஸ்லிம்களையும் தமிழர்களையும் சிறிலங்காவும், பிராந்திய வல்லரசும் பிரித்துக் கையாண்டு தீராத பகையை உருவாக்கின. அதில் வெற்றியும் கண்டன.
தற்போது தமிழர்கள் என்னும் ஒற்றைச் சொல்லில் திரண்டெழுந்து, மாபெரும் தமிழ்த்தேசிய சக்தியாக தேசியத்தலைவரின் சிந்தனை வழி பயணிக்கும் எம்மினத்தை சீர்குலைக்க இந்துத்துவம் என்னும் சொல்லாடலை பரவ விட்டு ஆன்மீக நாடகமாடுகின்றனர். இந்துக்கள் கிறிஸ்தவர்கள் என மதரீதியான பிரித்தாளுகைக்கு திட்டமிடுகின்றனர். அதற்கான ஒத்திகையே திருக்கேதீஸ்வரத்தில் அரங்கேற்றப் பட்டது. மக்களினதும் மதகுருமார்களினதும் தெளிவான சிந்தனையாலும் செயற்பாட்டாலும் அது முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது.
அண்மைய நாட்களாக 13 ம் திருத்தம் என்னும் மாய பொறியை தமிழீழத் தமிழர் மீது திணித்து, தமிழர்களின் சுயநிர்ணயக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்ய பாரதத்தின் ஆளுங்கட்சி பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. அதன் ஒரு வழியாக , பிரித்தானியாவில் சில தமிழ் அமைப்புகளின் அனுசரணையோடு பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை பிரித்தானியா வருகைதரவுள்ளார்.
அவர் தலைமையில் கூட்டங்களை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சந்திப்புகள் சார்ந்த பிரசுரங்கள் வெளிவந்த சூழலில் தமிழக உணர்வாளர்கள் பலர் கொதித்துப்போயிள்ளனர் எனத் தகவல்கள் வெளிவருகின்றது. அதன் சாராம்சம் என்னவென்றால்
புலம்பெயர் அமைப்புக்கள் அண்ணைமலையை அழைத்து சந்திப்பதற்கு, அண்ணாமலை யார்?
தமிழகத்திலேயே ஒரு பொருட்டாக கருதப்படாத ஒருவர்.
அப்படியானவரை சந்திக்கும் அமைப்புக்கள் எதைநோக்கிப் பயணிக்கின்றனர் என்ற வினாக்களையும் எழுப்பியுள்ளனர்.
இச்சந்திப்புகளின் தொனிப்பொருளாக தேசியத்தலைவரால் நிராகராகரிக்கப்பட்ட 13 ம் திருத்தம் இருக்கப்போகிறது. எனவே இந்த சந்திப்புக்களை ஏற்பாடு செய்தவர்களும், சந்திப்புகளில் கலந்து கொள்ளவுள்ளவர்களும் தங்களையறியாமலேயே , தமிழீழக் கோட்பாட்டு சிதைப்பு என்னும் நடவடிக்கைப் பொறிக்குள் சிக்குண்டு போக சந்தர்ப்பங்கள் ஏராளம். உதிரிகளாக இருப்பவர்களை இணைத்து , பெருந்திரளாக உள்ள தமிழ்தேசியக் கட்டமைப்பின் முன்னே ஒரு கோடு போடலாம் எனக் கனவு காண்கிறார்கள். எப்போதும் மேதகு பிரபாகரன் சிந்தனைகள் சிம்மசொப்பனம் தான். பேரிடி தான். இதுவும் கடந்து போகும். அண்ணாமலையின் வரவுடன் , தமிழ்த்தேசிய செயற்பாட்டாளராகவும், ஊடகவியலாளராகவும் தம்மை காட்டிக்கொள்ளும் பலரின் சாயங்கள் வெளுக்கும்…
-சிந்தனைப்பள்ளி-