பூநகரி அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அப் பகுதி மக்களுடன் கலந்துரையாடப்படவில்லை. மாறாக ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் சனிக்கிழமை இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 19 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் செய்து பெரிய ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். பூநகரியில் அபிவிருத்தி திட்டம் செய்யப் போவதாக அங்கு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். 500 மில்லியன் ரூபாய் அவசர அவசரமாக ஒதுக்கபடபட்டு பூநகரி அபிவிருத்தி என்ற பெயரில் அது அரங்கேற்றப்படுகின்றது. அந்த அபிவிருத்தி தொடர்டபான கலந்துரையாடல் அந்த பிரதேசத்து மக்களுடன் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த 2 ஆம் திகதி பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஒழுங்குபடுத்தப்பட்ட அக் கூட்டத்தில் வடமாகாண அதிகாரிகள் கலந்து கொண்டனர். அத் திட்டத்தை அப்போது விளங்கப்படுத்த முற்பட்டிருந்தார்கள். அந்த திட்டம் தயாரித்து அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள். அந்த திட்டம் தயாரிப்பதற்கு முன்னதாக அந்த பிரதேசத்து மக்களுடன் எந்தவிதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அந்தக் கூட்டம் சிவில் அமைப்புக்களுடன் என கூறப்பட்டாலும் வெறும் ஈபிடிபி ஆதரவாளர்கள் 8- 10 பேருடன் தான் அந்தக் கூட்டம் நடைபெற்றது.
ஏனையவர்கள் அனைவரும் திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களாக இருந்தார்கள். அந்த அபிவிருத்தி அந்த பிரதேசத்திற்கு பொருத்தமானதா இல்லை என கருத்துச் சொல்லக் கூடிய எவரும் அங்கு கலந்து கொண்டிருக்கவில்லை. பூநகரி, பொன்னாவெளி என்ற இடத்தில் ஒரு சில வருடங்களாக சீமெந்துக்காக சுண்ணக்கல் அகழ்தல் தொடர்பான பிரச்சனை போய் கொண்டு இருகின்றது. அகழ்வுக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களும் அந்த பூநகரிப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அந்த பிரதேசத்தை சேர்ந்த கிராஞ்சி, வேரவில், வலைப்பாடுஇ பாலாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த எவரும் அந்தக் கூட்டத்தில் அழைக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல் பல கிராமங்களில் உள்ள பொது அமைப்புக்களைச் சார்ந்தோர் அழைக்கப்படவில்லை.
முன்னர் பூநகரி பிரதேச சபை தவிசாளராக இருந்தவர் கூட அழைக்கப்படவில்லை. ஆனால் 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தலில் ஈபிடிபி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள். அவ்வாறானவர்களே பல அபிவிருத்தி கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் மூலம் குழப்பங்களும் அச்சறுத்தல்களும் ஏற்படுத்தப்படுகின்றது. எதிர் கருத்துக்களை சொல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்படுகிறது.
ஆகவே 500 மில்லியன் ரூபா அபிவிருத்தி என்பது வெறுமனே வாடியடியை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. 30 ஆண்டுகள் யுத்தம் நடந்துள்ளது. அபிவிருத்தியில் 50 ஆண்டுகள் பின்னோக்கி நின்கிறோம். அப்படிபட்ட நிலையில பூநகரியை அபிவிருத்தி செய்வதாக இருந்தால் வெளியில் உள்ள மக்கள் அங்கு வந்து மீள்குடியேறுவதற்கான உட்கட்டுமான வசதிகள் தேவை. அது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடற்கரையோரமாக காற்றாலைகள் அமைக்கப்படுகிறது. காற்றாலை அமைப்பதில் பொது மக்களுக்கு உடன்பாடில்லை. அவர்களது நிலம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கடற்கரையோரமாக அட்டைப் ப்ணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அட்டை பண்ணை வழங்குவதால் கரையோர மீன்பிடி பாதிக்கப்படுகிறது. மீன்பிடி இறக்கு துறைகள் புனரமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு புறம் கடற்தொழில் அழிக்கப்பட்டு கடல் அட்டை பண்ணைகள வழங்கப்படுகிறது. மறுபுறம் இறங்கு துறைகள் அமைக்கப்படுகின்றன என்றால் பூநகரி மக்களின் பொருளாதாரத்திற்காக திட்டங்கள் போடப்படுகிறதா அல்லது ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக இது மாற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுகிறது.
பூநகரி அல்லது கிளிநொச்சி அல்லது வடக்கைச் சேர்ந்தவர்களுக்கு அங்கு முதலீடுகளை செய்வதற்கும், வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கும் தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டயங்கள் இருகின்றதா என்றால் இல்லை. விடுதிகள் அமைக்கப்படவுள்ளதாக அந்த திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த விடுதிகளுக்குரிய காணிகள் யாருக்கு வழங்கப்பட போகிறது. அதன் முதலீட்டாளர்கள் யார் என்பது வெளிப்படுத்தவில்லை. அங்கே பாரிய சந்தேகம் இருக்கிறது. ஒரு விவசாய பிரதேசம் எப்படி நகர அபிவிருத்தி பிரதேசமாக தெரிவு செயயப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது. பூநகரி பிரதேசம் முழுமையாக அதில் உள்வாங்கப்படவில்லை. அந்த பிரதேசத்திற்கான ஒரு முழுமையான திட்டமாக அது வகுக்கப்பட்டிருந்தால் அது பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அப்படியல்ல.
ஏற்கனவே இவ்வாறான கவர்சிகரமான அபிவிருத்தி திட்டங்களை பற்றி எமக்கு தெரியும். யாழ்ப்பாணம், மயிலிட்டி திட்டம் இலங்கை மீன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை வழங்கியிருந்தது. அந்த மயிலிட்டி துறைமுகம் 2017 ஆம் ஆண்டு இதே ரணில் பிரதமராக இருந்த போது முன்னுரிமை காட்டி அந்த துறைமுகம் அபிவிருத்தி செய்வதாக கூறி மக்களிடம் இருந்த துறைமுகம், மத்திய துறைமுக அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டது. முதல் கட்ட அபிவிருத்தி பிற்பாடு அந்த மக்கள் தொழில் செய்த நிலங்களை இழக்க வேண்டி வந்தது. அது போல தான் பூநகரி அபிவிருத்தி திட்டமும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தலைமையில் இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவு தின நிகழ்வில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வவுனியா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.