தெற்கு ஐரோப்பா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

You are currently viewing தெற்கு ஐரோப்பா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தெற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசிவரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் வெப்பத்தின் அளவும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர். ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், குரோஷியா மற்றும் துருக்கியின் சில பகுதிகளில் வெப்பநிலை 40C க்கு மேல் செல்ல வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலியில் வெப்பநிலை 48.8C வரை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ரோம், போலோக்னா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட 10 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவ்வாயன்று, 40 வயது கடந்த ஒருவர் வடக்கு இத்தாலியில் சுருண்டு விழுந்து இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மிலன் அருகே உள்ள லோடி நகரில் குறித்த ஊழியர் போக்குவரத்து குறியீடுகள் மற்றும் பாதசாரிகளுக்கான கோடுகளை வரைந்து கொண்டிருந்தார் எனவும், இந்த நிலையிலேயே வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலிக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் பலர் வெப்ப அலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரோமில் உள்ள கொலோசியத்திற்கு வெளியே பிரித்தானியர் ஒருவர் வெப்பம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்துள்ளார். இதனிடையே, ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிற்றர் தண்ணீரைக் குடிக்கவும், காபி மற்றும் மதுவைத் தவிர்க்கவும் இத்தாலிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனல் காற்று காரணமாக வெளியே நடமாட முடியவில்லை என ரோமில் அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணிகள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கலாம் என இத்தாலிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டில் வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் மட்டும் 61,672 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெப்பத்தால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடு இத்தாலி எனவும், இங்கு இறப்பு எண்ணிக்கை 18,010 எனவும்,

ஸ்பெயின் நாட்டில் 11,324 எனவும் ஜேர்மனியில் இறப்பு எண்ணிக்கை 8,173 எனவும் பதிவாகியுள்ளது. இந்த கோடை காலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகலாம் என்றே நிபுணர்களால் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply