தமிழீழத் தேசியத் தலைவரின்நன்மதிப்பைப் பெற்ற திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இயற்கை எய்தினார்.
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், “புத்தன் பேசுகிறான்” என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். “மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை”, “தமிழ் அறிவோம்”, “தமிழ்ப் பெயர்க் கையேடு”, “இவர்தாம் பெரியார்”, “சோதிடப் புரட்டு”, “யார் இந்த ராமன்” உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
தமிழீழத் தேசியத் தலைவரின் அழைப்பை ஏற்று அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி, 2006 முதல் 2008 வரை ஈழத்தில் தங்கியிருந்து மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். அந்த அனுபவங்களை “ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்” என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். விடுதலைபுரம் என்ற காப்பியத்தையும் இயற்றியுள்ளார்.
பாளையங்கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார். இவருக்கு பகுத்தறிவாளர் கழகம் “தமிழிசைப் பாவாணர்’ என்ற பட்டத்தையும், கடையம் திருவள்ளுவர் கழகம் “பைந்தமிழ் பகலவன்’ என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளன.
இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துச்செல்வி, தமிழ்ச்செல்வி ஆகிய இரு மகள்களும், செல்வநம்பி, தினமணியின் அம்பாசமுத்திரம் பகுதி நேரச் செய்தியாளராகப் பணியாற்றி வரும் அழகியநம்பி ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
. அவரது தீடீர் இழப்பு தமிழினத்திற்கு பேரிழப்பாகும்.
இவருடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை தானமாக வழங்கப்படுகிறது.