தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்!

You are currently viewing தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்!

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.

அரசியல் களச் சூழ்நிலை அறிந்து எமக்கிடையிலான பலமான அரசியல் கூட்டு கட்டமைப்பு உருவாக்கினால் மட்டுமே நாம் எதிர்நோக்கும் அரசியல் போரினை எதிர்கொள்ள முடியும்.

தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் பிரேரணைகளை மையப்படுத்தி பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான ஆயத்த பேச்சுவார்த்தையினை தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் தமிழரசு கட்சி தலைவர் சிறீததரனுக்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சு வார்த்தையை வரவேற்பதோடு, இக்கூட்டு செயற்பாடு நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் கொள்கை ரீதியில் பலமடைய வேண்டும்.

விரிவடைய வேண்டும். புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களும் தடம் மாறாது களத்திலும் புலத்திலும் அரசியல் கடப்பாட்டினை நிறைவேற்ற துணை நிற்க வேண்டும்.

அன்று பொங்கு தமிழாக அதனைத்தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையாக திரண்டது போன்று மீண்டும் மக்கள் அரசியலும் அதற்கான கூட்டு செயல்பாடும் கொள்கை ரீதியில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி பலமடைய அனைவரும் அரசியல் முதிர்ச்சியோடு தம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

தமிழர் தாயக விடுதலை போராட்டத்தை தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் பயணத்தை சிதைத்த சக்திகளுக்கு மத்தியில் நேற்று முளைத்த சில அரசியல் காளான்களுக்கும் எம் தாயக அரசிற்கான கூட்டு தடையாக இருக்கலாம்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் கெட்ட தேசமாக அமையட்டும். அது எல்லாவற்றையும் பாடமாக கொண்டு அரசியல் பயணத்தில் விரைவாக பலமடைய வேண்டும் என்பதே தமிழ் தேச மக்களின் அரசியல் விருப்பம்.

நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையும் நாடாளுமன்றில் 3/2 அதிகமான பெரும்பான்மை கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அடுத்து வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும், மாகாண சபை தேர்தலிலும் முழு நாட்டையும் தமதாக்கிய பின்னர் யாப்பு சீர்திருத்தம் எனும் போர்வையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்.

சூடு கண்டவர்களாக நாம் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கட்சிகளாகவும் சமூக அமைப்புகளாகவும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எம் தாயக அரசியலை மையப்படுத்தி கூட்டு செயற்பாட்டு சூழலை அவசரமாக தமிழர் தாயக பிரதேசங்களில் உயிர்ப்பித்தல் அவசியம்.

உயிர்ப்பிக்கப்படும் கூட்டு தமிழ் மக்கள் பேரவை முன் வைத்த அரசியல் முன்மொழிவுகளோடு ஆரம்பிக்கலாம். பல்வேறு விதமான கருத்து மோதல்கள், தலைமைத்துவம் தொடர்பான சிக்கல்கள்,அமைப்பு ரீதியில் நிர்வாக சிக்கல்களும் வரலாம்.

கொள்கை அரசியலில் விட்டுக்கொடுப்புகள் இன்றி பலமான தேச அரசியலை கருத்தினை முதன்மைபடுத்தி சகிப்புத்தன்மையுடன் பயணத்தை தொடருவது சாலச் சிறந்தது.

மக்கள் விடுதலை முன்னணி செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் அண்மைய ஊடக பேட்டியில் மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் ஒன்று என்று கூறியதில் இருந்து மக்கள் முன்னணியில் அரசியல் முகம் வெளிப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாதவர்கள் தேசிய மக்கள் சக்தி என முகம் கொண்டு வெளியில் வந்துள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளருடைய கூற்றுக்கு தேசிய மக்கள் சக்தி இதுவரைக்கும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. எனவே தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியே.

எனவே தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அதன் கோரமுகம் அவ்வாறே உள்ளது என்பதிலே மாற்று கருத்து கிடையாது.

தமிழர் தேசத்தில் அரசு படைகளை பலப்படுத்தியதும், படைத்தளங்களை விரிவுபடுத்தியதும், அரச காணி மற்றும் பொதுமக்கள் காணிகளையும் கையகப்படுத்தியதும், மகாவலி அதிகாரி சபையை முன்னோக்கி நகர்த்துவதும் சிங்கள பௌத்த திணைக்களங்களை சுதந்திரமாக செயல்பட இடமளித்ததும் தெற்கின் சிங்கள பௌத்த பேரின வாத அரசியலின் தேவை கருதியே.

தற்போதும் அதே அரசியல் கருத்தியல் கொண்டவர்கள் பாதைகள் திறந்து விடுகின்றனர் ,படைத்தளங்களை கூ்ட்டுகின்றனர்( படைகளை குறைக்கவில்லை) மாவீரர் தினத்தை நினைவு கூற அனுமதிக்கின்றனர் கைதும் செய்கின்றனர்).

இது போன்ற கவர்ச்சி செயல்கள் மேலும் தொடரலாம். இதுவும் அவர்களின் அரசியல் தேவை கருதியே அன்றி தமிழர்களின் தேவை கருதி அல்ல. இதனை தமிழ் தேச மக்களும் நன்கு உணர்வார்கள். இந்நிலையில் மாற்றம் அடையலாம்.

எதிர்த்தரப்பு கோஷங்களுக்கு மத்தியில் மேலும் இறுக்கமடையலாம். ஆட்சி அதிகாரமும் பெரும்பான்மையையும் அவர்களிடத்தில் இருக்கின்றது என்பதை நாம் மறக்கவில்லை.

தமிழர் எதிர்கால அரசியல் நலன் கருதி கடந்த கால அரசியல் குரோதங்கள், போட்டியை அரசியல், காட்டிக் கொடுப்புக்கள், சலுகை அரசியல் என்பவருக்கு இடம் கொடுக்காது பெரும் தேசிய வாதத்தினை தேசமாக மக்களோடு சேர்ந்து எதிர் கொள்ள கொடுக்கவும் பேச்சு வார்த்தை தொய்வும் தோல்வியையும் சந்திக்காது முன்னோக்கி நகர்ந்து செல்லும் பொறுப்பும் கடப்பாடும் தமிழ் தேச உணர்வாளர்களுக்கு அவசியம்.

மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். அது கூட்டு அரசியலில் சுடராக வியாபிக்கட்டும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply