தேர்தல் ஒன்றே வழி! நாட்டில் கலவரம் ஏற்படும் ஆபத்து!

You are currently viewing தேர்தல் ஒன்றே வழி! நாட்டில் கலவரம் ஏற்படும் ஆபத்து!

இலங்கை மக்களின் விருப்பங்களுக்கு அரசாங்கம் செவிசாய்காவிடின் நாட்டில் கலவரம் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் அந்த கலவரத்தை அடக்குவதற்கு இராணுவத்தையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்துவார் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எச்சரித்துள்ளது.

இலங்கையின் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேர்தல் ஒன்றே நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரே வழி என கூறியுள்ளார்.

கஜேந்திரகுமார் உரையின் தமிழாக்கம்!

————————————————————-

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள் இன்று தாம் செய்த தவறை உணர்ந்துள்ளனர்.

ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்களால் இந்த நாடு வங்குரோத்து அடைந்துள்ளது.

ஆகவே இவர்கள் அரசாங்கத்தில் தொடர முடியாது எனவும் அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் மக்கள் கோருகின்ற போதிலும் அதற்கு செவிசாய்ப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பதில்லை என தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில் மக்களுக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்த வேறு வழியில்லை.

ஆகவே தான் அவர்கள் ஏனைய ஜனநாயக வழிகளில் போராடுகின்றனர். அதன் அடிப்படையிலேயே அவர்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்கு ஆணை வழங்கியிருக்கும் நிலையில், அந்த ஆணை முற்றுமுழுதாக மீறப்படும் போது அந்த ஆணையை மீள பெறுவதே ஒரே மாற்றுவழி.ஆணையை மீளப் பெறுவதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகள் இல்லாத நிலையில், வீதிகளில் இறங்கி, அந்த ஆணையை மீளப் பெறுவதே ஒரே வழி.அதனையே மக்கள் இன்று செய்கின்றனர்.

இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.

அது என்ன நாடகம். இந்த சபையானது செய்த விடயங்களையே மீண்டும் செய்கின்றது.

இந்த சபையானது மக்களின் விருப்பங்களை பிரதிநிதிதித்துவம் செய்யவில்லை.

3 இல் 2 பெரும்பான்மை  உறுப்பினர்கள், இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் இந்த அரசாங்கத்தின் மிகவும் பலமிக்க கூட்டணியில் அங்கம் வகித்திருந்தனர்.

கண்மூடித்தனமாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர்.

வன்முறை மிக்க வகையில் ஆதரவு வழங்கினர். இவர்கள் திடீரென எதிர்கட்சியில் அமர்வதற்கு தீர்மானிக்கின்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் எதிர்கட்சியில் அமர்வதற்கு இவர்கள் மேற்கொண்ட தீர்மானம் நாடகம் என்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

எனக்கு முன்னர் உரையாற்றிய அரசாங்கத்தில் அங்கம் வகித்து சுயாதீனமான உறுப்பினராக மாறியுள்ள ஜகத் புஷ்பகுமார, தற்போதுள்ள அரசாங்கம் தொடர வேண்டும் என்ற பாணியிலேயே கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதில் எந்தவொரு பயனும் இல்லை என அவர் கூறுகின்றார்.

எனினும் குற்றவியில் பிரேரணையை கொண்டுவந்தே ஜனாதிபதி பதவி நீக்க வேண்டும்.

அது சாத்தியமில்லை என ஜகத் புஷ்பகுமார குறிப்பிடுகின்றார்.

அது நடைமுறை சாத்தியமில்லை

ஆகவே நேரத்தை வீணடிக்க வேண்டாம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவது சட்ட வலுவற்றது.

ஆகவே இது மக்களை முட்டாள் ஆக்கும் செயற்பாடு என அவர் கூறுகின்றார்.

மாற்றுத் திட்டம் குறித்து ஐக்கிய மக்க்ள சக்தி கூறாத வரை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க முடியாது.

அதன் பின்னர் அவர்கள் என்ன செய்யப் போகின்றனர் என கேட்கின்றனர். என்ன செய்யப் போகின்றீர்கள் என்பதை கூறாத வரை ஆதரவு வழங்கப் போவதில்லை என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவ்வாறு எனின் ஏன் எதிர்கட்சிக்கு மாறீனீர்கள். இதன்மூலம் மக்களின் விருப்பத்திற்கு செவிசாய்காமல், தற்போதுள்ள நிலைமை நீடிக்கவே நீங்கள் விரும்புகின்றீர்கள்.

இந்த நெருக்கடியை தேர்தல் மூலமே தீர்க்க முடியும்.தேர்தல் நடத்தப்படும் வரை மக்கள் நம்பிக்கையை பெறும் வரை இந்த சபையின் உறுப்பினர்கள் வீதியால் செல்ல முடியாது.

இன்று ஒன்றிணைந்த எதிர்கட்சி என்பது சவாலானது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்களே பொருளாதாரத்திற்கு ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கின்றனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த போது, அதில் அங்கம் வகித்த குறைந்தது அரைவாசிப் பேரை கொண்டே அரசாங்கத்தை அமைக்க முடியும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற குற்றவாளிகளை கொண்டு எவ்வாறு ஆட்சி நடத்த முடியும்?

தேர்தல் ஒன்றை நடத்தாமல் அரசாங்கத்தை அமைக்க முடியாது.

அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தேர்தலை எவ்வளவு தூரம் பிற்போடுகின்றீர்களோ அந்த அளவிற்கு நாட்டின் அரசியல் நிலைமை மேலும் மோசமாகும்.

இந்த சபையானது மக்களின் விருப்பதை பிரதிநிதிதித்துவம் செய்யாத காரணத்தால் கலவரம் வெடிக்கும் நிலைமை உருவாகும்.

தற்போதும் கூட இராணுவத்தினரை அமைச்சுக்கும் அமைச்சின் செயலாளர்களாகவும் நியமிப்பதில் ஜனாதிபதி தற்போதும் ஆர்வம் காட்டுகின்றார்.

இந்த நிலையில் கலவரம் வெடிக்குமாயின், மக்களின் குரலுக்கு செவிசாய்காத அரசாங்கம் இராணுவத்தையே பயன்படுத்தும்.அதுவே நடைபெறப் போகின்றது. ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் அதனை நோக்கியே தள்ளுகின்றது. 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply