அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களம் காணவிருக்கும் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டுவதில் வரலாறு படைத்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், பல ஆயிரக்கணக்கான நன்கொடையாளர்களிடம் இருந்து மொத்தம் 81 மில்லியன் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 677 கோடி என்றே கூறப்படுகிறது.
இதில் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக இந்தத் தேர்தலுக்காக நிதி அளித்துள்ளனர். மேலும், ஜனாதிபதி தேர்தலில் களம் காணும் எந்த ஒரு வேட்பாளரும் 24 மணி நேரத்தில் இந்த அளவுக்கு பெருந்தொகையை திரட்டியதில்லை என்றே தரவுகளின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர்.
மொத்தமாக மூன்று அமைப்புகள் கமலா ஹாரிஸ் சார்பில் நிதி திரட்டியுள்ளது. 880,000 நன்கொடையாளர்களுக்கும் அதிகமானோர் நிதி அளித்துள்ளனர். இதில் 60 சதவிகிதத்தினர் 2024 தேர்தலில் முதல் முறையாக நிதி அளிப்பவர்கள் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திடீர் எழுச்சி, மற்றும் வரலாறு காணாத ஆதவும் கமலா ஹாரிஸ் கட்டாயம் இந்த தேர்தலில் வெல்வார் என்ற நம்பிக்கையை அடித்தட்டு மக்களில் விதைத்துள்ளதை உணர்த்துவதாக, தேர்தல் பரப்புரைக்கான செய்தித் தொடர்பாளர் Kevin Munoz தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல தரப்பு மக்கள் மற்றும் கூட்டணியில் இருந்து கமலா ஹாரிஸ் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்து வருகின்றனர். கமலா ஹாரிஸ் மீது குவியும் ஆதரவால் டொனால்டு ட்ரம்ப் தரப்பு அச்சத்தில் இருப்பது, அவர்களின் தரமற்ற பரப்புரையே சான்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கமலா ஹாரிஸ் முன்னெடுக்கும் தேர்தல் பரப்புரைக்கான நிதி 250 மில்லியன் டொலர் என அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஜனநாயக கட்சி இதுவரை கமலா ஹாரிஸ் தான் தங்களின் வேட்பாளர் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அடுத்த மாதம் நடக்கும் கட்சி மாநாட்டில் யார் வேட்பாளர் என்பது குறித்து அறிவிப்பார்கள். இருப்பினும், ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், அந்த இடத்திற்கு கமலா ஹாரிஸ் முன்மொழியப்படுவார் என்றே தகவல் கசிந்துள்ளது.
ஜோ பைடனும் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸை தாம் ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். அத்துடன் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டனும் ஆதரவளித்துள்ளனர். ஆனால் பராக் ஒபாமா மட்டும் இதுவரை கமலா ஹாரிஸ் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.