தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமெனக்கோரி காணி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலானோர் கடந்த வருடம் (2023) மே 03 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு கட்டமாக போராடி வருகிறார்கள்.
போராட்டக்காரர்களை அச்சுறுத்தி மிரட்டி அடியணிய வைத்து வெளியேற்றும் முயற்சியில் சிங்கள பொலிஸ் பொறுப்பதிகாரி ஈடுபட்ட போதிலும் தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக நடைபெற்றது
இந்நிலையில் தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று 16.09.2024 ஆம் திகதி திங்கள் மாலை 04 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
தமிழர்களின் காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து, எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையில் பௌர்ணமி தின வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு தென்பகுதியிலிருந்து பேரினவாத மக்கள் அழைத்து வரப்படுவது வழமை. அந்தவகையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்த போராட்டம் 16 ஆரம்பமாகி இன்று 17 ம் திகதியும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுள்ளது
இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்துகொண்டனர்.




