புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா? என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவரால் இன்றையதினம்(21) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
படையினரை பொறுத்தவரையில் தமிழர் பிரதேசத்தில் நாட்டின் சட்டங்கள் எல்லாம் அவர்களின் இரும்பு சப்பாத்தின் கீழ் என்பதற்கு இன்னொரு அடையாளமே அவர்களால் தையிட்டியில் தனியார் காணியில் கட்டப்பட்ட திஸ்ச விகாரையாகும்.
இவ் அநீதிக்கு எதிராக ஜனநாயக உரிமையோடு போராடுவோர்க்கு எதிராக பொலிசாரும் செயற்பட்டு போராட்டம் தொடராதிருக்க அடையாளம் காணப்பட்டோரை விசாரணைக்கென அழைப்பதையும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அநீதிக்கு எதிரான ஆட்சியாளர்கள் தம்மை தம்பட்டம் அடிக்கும் தேசிய மக்கள் சக்தி தலையிட்டு நீதியை நிலைநாட்டாதவிடத்து அது தமிழர்களுக்கு இழைக்கும் அநீதியாக அமைவதோடு அதுவே இனங்களுக்கிடையில் அமைதியின்மை இன,மத விரிசல் என்பன ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். அது மட்டுமல்ல தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த தமிழ் தேச மக்களை அவமானப்படுத்துவதாக அமையும் எனவும் கூறுகின்றோம்.
வரலாற்றில் மன்னர் ஆட்சி காலத்தில் நாட்டில் செல்வம் பெருகி அமைதி நிலவிய போது அரசன் தமது கௌரவத்திற்காகவும் ,புகழுக்காகவும் வானுயர கோபுரங்களோடு வழிபாட்டிடங்களை அமைத்ததாகவும் அதன் மூலம் பக்தி வளர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் இலங்கையில் விசேடமாக 1948 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலகட்டத்தில் சிங்கள பௌத்த பேரின வாதத்தை பாதுகாக்கவும் அதன்மூலம் அரசியல் செய்யவும் ஆட்சியை கைப்பற்றவும் மட்டுமல்ல தமிழர் தேசத்தில் நிலங்களை ஆக்கிரமிக்கவும் ஆட்சியாளர் விகாரைகளை கட்டியதே வரலாறு.
அதேபோன்று தமிழர் தேசத்தில் பல நூறு விகாரைகளை கட்டுவோம் என சூழுரைத்த சிங்கள பௌத்த அரசியல்வாதிகளையும் கொண்டதே நாட்டின் அரசியல்.
யுத்த காலத்தில் படையினர் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து துரத்திவிட்டு அவர்களுக்கு சொந்தமான காணிகளை இல்லாமல் ஆக்கிரமித்து பாரிய படைத்தளங்களை அமைத்தனர் புத்தரின் தர்ம போதனைகள் எல்லாம் தூக்கி எறிந்தவர்கள் தனது வழிபாட்டுக்கென படைத்தளங்களில் வழிபாட்டுத் தலங்களையும் அமைத்துக் கொண்டனர்.
இந்த வகையில் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ள தையிட்டி விகாரை பல கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்புகின்றது. விகாரைக்கென்று காணி இருக்கும் போது தனியார் காணியை தேர்ந்தெடுத்து அதன் உரிமையாளர்களின் அனுமதியின்றி விகாரை கட்டியது ஏன்? தொற்று நோய் காரணமாக முழு நாடும் முடக்கப்பட்டிருந்த போது அவசர அவசரமாக விகாரை எழுப்பியது ஏன்? நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் போதும் படையினர் யாரின் அனுமதியோடு இவ் விகாரையை அமைத்தனர்? அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இதற்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்ற கேள்விகளோடு இந்த விகாரையை அமைக்கப்பட்டதன் பின்னால் ஏதோ மர்மம் உள்ளதாகவே தோன்றுகின்றது. இதற்கு அடிப்படை காரணம் தனியார் காணியில் விகாரை அமைத்தமையாகும்.
கொழும்பு துறைமுகப் பகுதியில் அதுவும் அதி பாதுகாப்பு பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அண்மையில் செம்மணியில் மின்சார தகன மேடை அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்ட போது மனித எச்சங்கள் வெளி வந்ததாக கூறப்படுகின்றது.
இவற்றைத் தவிர நாட்டின் தமிழர் பிரதேசம் உட்பட பல பகுதிகளில் சமூக புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது தொடர்பான விசாரணை முழுமை பெற்றதாக இல்லை. காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடுவோர் சமூக புதைகுழிகளுக்கு முன்னால் நின்று கண்ணீர் விடுகின்றனர்.நீதி கேட்டு வீதியில் நிற்கின்றனர்.
அவர்களுக்கு இன்று வரை நீதி கிட்டவில்லை. இந்த நிலையில் அவ்வாறான ஒரு சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக இவ் விகாரை கட்டப்பட்டுள்ளதா? என மக்கள் சந்தேகம் கொள்வதிலும் நியாயம் இருக்கின்றது.
தையிட்டி விகாரை என்பது நில ஆக்கிரமிப்பு, யுத்த வெற்றி, பௌத்த மயமாக்கல் அடையாளங்களுக்கு அப்பாலும் சிந்திக்க வைக்கிறது. ஏனெனில் உண்மையில் பௌத்தத்தை காக்க வேண்டும் எனில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடத்திலேயே விகாரை கட்டப்பட்டிருக்க வேண்டும். அதனை தவிர்த்து விட்டு வேறு ஓர் இடத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?அதுவும் அவசர அவசரமாக விகாரை கட்டப்பட்டுள்ளது.அதுவே விகாரைக்கு பின்னால் ஏதோ மர்மம் உள்ளது. அதனை மறைக்கவே படையினர் திட்டமிட்டு செயற்பட்டுள்ளனர் என மக்கள் சிந்திக்கின்றனர். மர்ம முடிச்சை அவிழ்க்க வேண்டியதும் மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டியதும் அரசின் கடமையாகும்.
யுத்த காலத்தில் இந்து,கிறிஸ்தவ ஆலயங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.உயிருக்குப் பயந்து அபயம் தேடி அங்கு வந்திருந்த மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். மக்கள் வாய் திறக்கவில்லை ஏனெனில் அடக்குமுறை கொலை ஆயுதம் அவர்களுக்கு நேராக நீட்டிக் கொண்டிருந்ததோடு தலைக்கு நேராகவும் தொங்கிக் கொண்டிருந்தது.
தம்புள்ளையில் இந்து ஆலயமொன்று அனுமதியின்றி கட்டப்பட்டதாக இடித்து அழிக்கப்பட்ட போது மக்கள் பொறுமை காத்தனர். ஆனால் திஸ்ச விகாரை என்பது சிங்கள பௌத்த பேரினவாதம் தம் தலையில் காலை வைத்து விதைத்திருப்பதன் அடையாளமாகவே மக்கள் உணர்கின்றனர். அதனால் மக்கள் தம் அறக்கோபத்தையே வெளிப்படுத்துகின்றார்.இதனை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
வெறுமனே பிழையான இடத்தில் விகாரை கட்டப்பட்டுள்ளது என்று கூறுவது மட்டும் பிரச்சனைக்கு தீர்வு அல்ல. மக்களுடைய சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நாட்டின் சட்டங்களுக்கு காவலாக இருப்போம் என்பதை ஆட்சியாளர் உறுதிபடுத்தலும் வேண்டும்.
கடந்த கால ஆட்சியாளருக்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி என்ன செய்ய முடியும்?என கேள்வி கேட்போர் ஒன்றை மனதில் இருத்திக் கொள்ளல் வேண்டும்.தேசிய மக்கள் சக்தியினர் கடந்த கால தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி அதற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியதை மறந்துவிட முடியாது. தற்போது அவர்களை தேடி தேடி வலை வீசி நீதிமன்றம் கொண்டு வர முயற்சிப்பதை நம் காணுகின்றோம். பலர் மீது வழக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே திஸ்ஸ விகாரை விடயத்திலும் அநீதி நிகழ்ந்துள்ளது. இங்கும் நீதி நிலை நாட்டப்படுவதோடு குற்றவாளிகள் நீதிமன்றிற்கு கொண்டுவர வேண்டும்.
இங்கு விகாரை பிரச்சனை என்பது சமயம் சார்ந்த பக்தி சார்ந்த பிரச்சனை அல்ல. இது தமிழ் மக்களின் அரசியலோடு தொடர்புடையது. அதனாலேயே போலி சிங்கள தேசியவாதிகளும் சிங்கள பௌத்த அரசியல்வாதிகளும் கூக்குரல் இடுகின்றனர்.
தமிழர்களின் அரசியல் வீழ்த்தப்பட்ட தன் அடையாளமாகவே விகாரை அமைந்துள்ளது.இதனை ஏற்க முடியாது.
எனவே சமூக புதைகுழி விகாரைக்குள் இருக்கலாமோ என்கின்ற சாதாரண சந்தேகத்தினை தீர்க்க வேண்டியது ஆட்சியாளரின் கடமை. அதேபோன்று நீதியை நிலைநாட்ட வேண்டியதும் அவர்களின் பொறுப்பாகும்.
இதற்கான அழுத்தத்தினை தமிழ் தேசத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க கட்சியினர் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்புதல் வேண்டும். மக்களோடு பயணிக்க வேண்டும். இதுவே இன்றைய தேவை.அதுவே மக்களுக்கான அரசியல் கௌரவமாகவும் நீதிக்கான பயணமாகவும் அமையும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.