அன்னைபூபதி தமிழ் கலைக்கூட வைத்வெத் வளாகத்தில் இறுதியாக நடைபெற்ற பிரத்தியேக ஆண்டுக் கூட்டத்தில் அன்னை தலைமை நிர்வாகியும் உதவி நிர்வாகியும் பெற்றோர்களை மிரட்டி ஆவேசமாக பேசியதன் காரணமாக அங்குள்ள பெற்றோர்களும் ஆவேசமாக கேள்விகளை கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை கடந்த நிர்வாக பிரத்தியேக ஆண்டு க் கூட்டத்தில் கேள்வி கேட்ட பெற்றோர்களை அச்சுறுத்தும் வகையில் பாடசாலைக் கட்டடத்துக்கள் பிரவேசிக்க முடியாதென்றும், அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூட செயற்பாடுகளில் ஈடுபடமுடியாதென்றும், மீறினால் அங்கத்துவ உரிமை நீக்கப்படும் என்றும் உளவியல் அச்சுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் விசனமடைந்த பெற்றோர்கள் அப்படியானால் ஆண்டுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசிய அன்னை தலைமை நிர்வாகத்தினருக்கு ஏன் இக்கடிதம் அனுப்பவில்லை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.
அன்னைபூபதி தமிழ் கலைக்கூட வைத்வெத் வளாகத்தில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை இயங்க விடாது தங்களுக்கு சார்பானவர்களை வைத்து நிர்வாகத்தை இயக்குவதற்கு அன்னை தலைமை நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள் என்பது மிக முக்கியமான விடயம், இதனால் அன்னை தலைமை நிர்வாகத்துக்கும் அன்னைபூபதி தமிழ் கலைக்கூட வைத்வெத் பெற்றோர்களுக்கும் இடையில் முறுகல்நிலை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அன்னைபூபதி தமிழ் கலைக்கூட வைத்வெத் பெற்றோரால் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை இயங்க விடாது முடக்குகின்ற வேலைகளை அன்னைத் தலைமை நிர்வாகம் தொடர்ச்சியாக ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு சென்று இடையூறுகளை விளைவித்து வருகின்றது.
இதன் விளைவாக இன்று(25.01.2025) சனிக்கிழமை ஜனநாயக வழியில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தை இயங்க விடாமல் அன்னை தலைமை நிர்வாகம் அங்கு சென்று தமது அதிகார அத்துமீறலை வெளிப்படுத்தி குழப்பத்தை விளைவித்திருந்தார்கள் இதனால் மாணவர்களின் கல்வி இடைவேளை வரை பாதிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாங்கள் சொல்லுவதன்படிதான் நடக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து தடை செய்யப்பட்ட நிர்வாகத்தை இயங்க விட முடியாது என்ற தோரணையில் கருத்துக்களை முன்வைத்த நிலையில் பெற்றோர்கள் கடுமையான கேள்விகளை தொடுத்து அவர்களை திணறடித்திருந்தனர்.
ஆனாலும் அங்கு வந்திருந்த அன்னை தலைமை நிர்வாகி, அன்னை தலைமை நிர்வாக உறுப்பினர் மற்றும் அன்னை தலைமையின் செயலாளர் தாங்கள் சொன்னதை மட்டும் தான் நீங்கள் கேட்க வேண்டும் அப்படி கேட்கத் தவறினால் காவல்துறையை அழைக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளனர், இதனால் விசனமுற்ற பெற்றோர் உடனடியாக வெளியேறி காவற்துறையுடன் உள்ளே வருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே பலருக்கும் இருக்கும் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அன்னைத்தலைமை நிர்வாகின் செயற்பாடும், கருத்தும் இன்றைய வருகையில் தெட்டத்தெளிவாக புலப்பட்டு நிற்பதாக பெற்றோர்கள் பேசியதையும் அவதானிக்க முடிந்தது, அதாவது ஏற்கனவே அன்னைத்தலைமை நிர்வாகியாக இருந்தவர் தொடர்ந்தும் உதவி அன்னைத்தலைமை நிர்வாகியாக இருக்கும் வரைக்கும் அவருடைய அதிகார அத்துமீறலின் நிகழ்ச்சி நிரலில் மட்டுமே தற்பொழுது வந்திருக்கும் புதிய அன்னைத்தலைமை நிர்வாகியின் போக்கும் இருக்கும் என்பதுதான்.
அன்னைத்தலைமை நிர்வாகம் ஜனநாயக பண்புகளை கடைப்பிடிக்கவோ மதிக்கவோ முடியாத பண்புகளை பின்பற்றி வருவதால் எமது கட்டமைப்பை,சமூக நெறிகளை சீர்திருத்தமுடியாத முரண்களை வளர்த்துக்கொண்டே செல்லப்போகின்றது என்பதைத்தான் கோடிட்டுட்டுக்காட்டி நிற்கின்றன அதிகார அத்துமீறல் செயற்பாடுகள்.
-தகவல் வைத்வெத் பெற்றோர்-