கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட பலருக்கு மீண்டும் அந்நோய்த் தொற்று உறுதியாகிவரும் நிலை சீன மருத்துவத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. SARS-CoV-2 வைரஸ் புரியாத புதிராக மாறி வருவதால் பிளாஸ்மா (நோய் எதிர்ப்பு வெண் குருதி அணுக்கள்) சிகிச்சை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குணமடைந்தோர் உடலில் உருவாகும் ஆன்டிபாடி (Antibody – பிறபொருளெதிரி) எனும் எதிர் உயிரியை வைத்து மற்றவர்களை குணமடைய செய்யும் பிளாஸ்மா சிகிச்சை முயற்சிகளுக்கு இது தடைக்கல்லாய் மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து விடுபட்டிருந்தாலும் பாதிப்பு குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கவில்லை என்றும் உயிரிழப்பு தொடர்பாக முழுமையான விவரங்களை வெளியிடவில்லை என்றும் உலக நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா ஆளானது, சீனாவை விட அதிக பாதிப்பு ஏற்பட்டதால் பரம வைரிகளான அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட மேலை நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.
இந்த சூழலில், கொரோனா தொற்றின் பிறப்பிடமான ஊஹான் நகரில் மேலும் ஆயிரத்து 500 பேர் உயிரிழந்ததாக சீனா திடீரென சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியி்ட்டது மேலை நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்த்தது போலாகிவிட்டது. தரமற்ற விரைவு பரிசோதனைக் கருவி விநியோகம் என்ற புகாரும் சேர்ந்து வாட்டி வதைத்து வரும் நிலையில், புதிதாக ஒரு பிரச்னையை சீனா உள்நாட்டில் எதிர்கொண்டுள்ளது.
குணமான சிலருக்கு 60, 70 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சீன மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட சீன பிரஜைகளில் ஒருவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குணமடைந்த 50 நாட்களுக்குப் பிறகு தனக்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் இரத்தப்பரிசோதனையில் கொரோனா உறுதி ஆகியிருப்பதாக கூறியுள்ளார். இப்பிரச்னை சீனாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
2003ல் சார்ஸ் பரவியபோது இதுபோன்ற பிரச்னையை சந்திக்கவில்லை எனக் கூறும் சீன மருத்துவர்கள், SARS-CoV-2 பெரும் புதிராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் தென்கொரியாவிலும் குணமடைந்த 160 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இது சர்வதேச ஆய்வாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளோர் 14 முதல் 28 நாள்கள் வரை தனிமையில் இருக்கவேண்டும் என்ற உலகளாவிய பரிந்துரையும் கேள்விக்குறியாகியுள்ளது.குணமடைந்தோர் உடலில் உருவாகும் ஆன்டிபாடி எனும் எதிர்உயிரியை வைத்து மற்றவர்களை குணமடைய செய்யும் பிளாஸ்மா சிகிச்சை முயற்சிகளுக்கு இது தடைக்கல்லாய் மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு குழப்பங்களை மருத்துவர்களுக்கு தந்து வரும் SARS-CoV-2 வைரஸ் சந்தேகமேயின்றி, ஒரு புரியாத புதிர்தான்!
பிளாஸ்மா சிகிச்சை:
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு, அவற்றைப் பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது. இந்த சிகிச்சை முறையானது ஏற்கெனவே மெர்ஸ், சார்ஸ் போன்ற வைரஸ் தொற்று ஏற்பட்ட போது நல்ல பலனைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.