முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டிருந்வர்களில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் முகக்கவசம் அணியாது நடமாடிய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட 110 பேருக்கு இன்றைய தினம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 8 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், திருகோணமலை வீதியிலுள்ள வர்த்தகநிலையங்கள், கொக்குவில் வாராந்த சந்தை, மட்டக்களப்பு பொதுச் சந்தை உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பகுதிகளை சுற்றிவளைத்த காவல்துறையினர் முகக்கவசம் அணியாத வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரை கைது செய்தனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அழைத்து செல்லப்பட்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் கைதான 55 பேருடன் 110 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு காரியாலயத்தில் சேவையாற்றும் பணியாளர் ஒருவர் உள்ளிட்ட 8 பேருக்கு தொற்றுறுதியானது.
இதனையடுத்து காணி சீர்திருத்த ஆணைக்குழு காரியாலயத்தை தற்காலிகமாக மூடுவதற்கு சுகாதார அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.