தொல்பொருள் திணைக்களம் கடும் இனவாத கொள்கையுடன் செயற்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்

You are currently viewing தொல்பொருள் திணைக்களம் கடும் இனவாத கொள்கையுடன் செயற்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தொல்பொருள் திணைக்களம் சிங்கள  மயமாக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது, இது தொல்பொருள் திணைக்களமல்ல, கடும் இனவாத போக்கான திணைக்களம். முப்படைகளின் ஆதரவுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இருப்புக்கள் இல்லாதொழிக்கப்படுகிறது என  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தின் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இருப்பையும்,அடையாளங்களையும்  அழிக்கும் வகையில் சிங்கள குடியேற்றங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.வடக்கில் கருநாட்டுக்கேணி பகுதியில் சிங்கள குடியேற்றத்தை அமைக்க மகாவலி அதிகார சபை மேற்கொண்ட முயற்சிக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாற்றுப்பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் பருவகால மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. ஆனால் தற்போது இவர்களுக்கு நாயாறு கொக்கிளாய் ஆகிய பகுதிகளில்  சொந்த வீடுகளை தமிழ் நிலங்களை ஆக்கிரமித்து கட்டிக் கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இந்த செயற்பாடு தமிழரின் இன பரம்பலை முழுமையாக அழிக்கும்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள  வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ;வரர் ஆலயம் 5000 ஆண்டுகால புராதான தொன்மையை கொண்டுள்ளது.ஆரம்ப கால தமிழர்கள் சிவ வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த மலையின் சிவலிங்கம் மற்றும் விக்கிரகங்கள்  அழிக்கப்பட்டு தற்போது வழிபாடுகளுக்கும் தடையேற்படுத்தப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள வெடியரசன் கோட்டை தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் தொன்மையை கொண்டுள்ளது ஆனால் தற்போது இந்த கோட்டையை பௌத்தத்துடன் தொடர்புப்படுத்தி தொல்பொருள் திணைக்களம்  பொய்யான அறிவிப்புக்களை விடுத்துள்ளது.மறுபுறம் கச்சத்தீவும் சிங்கள மயமாக்கத்தில் இருந்து விடுபடவில்லை.

யாழ்ப்பாணம் தம்பாட்டி கிராமத்தின் காணிகள் கடற்படைக்கு கையளிக்கும் முயற்சிகள் மக்கள் போராட்டத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.முப்படைளின் ஆதரவுடன் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் திட்டமிட்ட வகையில் சிங்கள மயமாக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் புல்மோட்டை  பகுதியில் முஸ்லிம் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் பொன்மலைகுடா பகுதியில் புத்தர் சிலை வைக்கும் முயற்சிகள் பெரும்பான்மை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போது அப்பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.அவ்விடத்தில் இருந்து பிக்குகளின் மெய்பாதுகாவலர்கள் பொது மக்களை துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியுள்ளார்கள்.பௌத்த பிக்குகளுக்கு துப்பாக்கி ஏந்திய  மெய்பாதுகாவலர்களை வழங்கியது யார்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாட்டில் புரையோடி போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்காமல் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்பு வழங்குகிறது சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு தமிழ் முஸ்லிம் சமூகத்தை முழுமையாக கருவறுக்கும் செயற்பாடுகள் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்படுகிறது.

சரத் வீரசேகர கடும் இனவாத பொய்களை சபையில் குறிப்பிட்டுள்ளார்.குருந்தூர் மலையில் மனசாட்சி இல்லாமல் இந்து மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ளது.தொல்பொருள் திணைக்களம் என்பது பௌத்தர்களின் அடையாளங்களை மாத்திரம் பாதுகாப்பது அல்ல என்பதை பொறுப்பான அமைச்சர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகவே  தொல்பொருள் திணைக்களத்தை முற்றாக வெறுக்கிறோம் இது இனவாத திணைக்களம் நாங்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல ஆகவே இனவாத தலைவர்களை தெரிவு செயவதை சிங்கள மக்கள் இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும்  என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply