தொல்லியல் திணைக்களம் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முழுமையான அனுசரணை!!

You are currently viewing தொல்லியல் திணைக்களம் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முழுமையான அனுசரணை!!
01.03.2025  நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நீதி மற்றும் தேசிய இடைநிலை அமைச்சு தொடர்பான விடயதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை :-
கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே!
சுதந்திரமான வழக்குரைஞர் அலுவலகம் குறித்த அரசாங்கத்தின் சிந்தனை குறித்த கேள்வியுடன் ஆரம்பிக்க விரும்புகிறேன். வடக்கு கிழக்கில் இருந்து பல வழக்குகள் வவுனியாவில் உள்ள மாகாண மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். குறித்த வழக்கு விசாரணையின் முடிவில் நீதிமன்றம் மனுதாரர்களுக்கு சார்பாக உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு சில தனிநபர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதற்கு இராணுவத்தை பொறுப்பாக்குகிறது. இராணுவம் சார்பில் ஆஜராகியிருந்த சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த உத்தரவுக்கு எதிராக தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளது.
கௌரவ அமைச்சர் அவர்கள் இங்கு இருப்பதால் எனது கருத்தை தெரிவிக்கின்றேன். மேல்முறையீட்டு நீதிமன்றமானது மனுதாரர் சார்பாக உத்தரவிட்டால், பின்னர் மீண்டும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்படும். இதுபோன்ற வழக்குகளுக்காக மாறிமாறி முன்னிலையாகும் அனைத்து தொழில்முறை வழக்கறிஞர்களின் பார்வையும் இதுதான். இது நலன்முரண்பாட்டை (conflict of interest) உருவாக்கும்.
இராணுவத்தினருக்கான அரசின் முதன்மை வழக்கறிஞராக இருக்கும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதுபோன்ற வழக்குகளில் அரசுக்கு எதிராகச் செல்லும் நிலையை உருவாக்கும்.
எனவே அங்கு மிகவும் வெளிப்படையாக நலன்முரண்பாடு (conflict of interest) உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளினால் அந்த வழக்கில் முழு நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகிறது. எனவே அரசாங்கம் இதை சரிசெய்யும் வகையில் ஒரு சுதந்திரமான வழக்கறிகுரைஞர் அலுவலகத்தை உருவாக்குவது வரவேற்கத்தக்கதாக அமையும்.
அத்தகைய அலுவலகம் போதுமான உள்கட்டமைப்புடன் இருக்க வேண்டும். வளங்கள், அதிகாரிகள், விசாரணையில் நேரடியாக ஈடுபடும் அதிகாரம், காவல்துறையினருக்கு வழிகாட்டுதல், காவல்துறை மேற்பார்வை மற்றும் பிற விசாரணை அமைப்புகள் என்பவற்றுடன் குற்றவாளிகளுக்கு எதிராக நேரடியாக நடவடிக்கை எடுக்க கூடிய அதிகாரம் என்பன இருக்கவேண்டும்.
இந்த நலன் முரண்பாடு (conflict of interest) தொடர்பான விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்படுவதைப்போன்றல்லாமல் இருப்பதை உறுதிசெய்வதே முக்கியமானதாகும்.. நான் சட்டமா அதிபர் திணைக்களம் மீது எந்தவிதமான அபிப்பிராயங்களையும் கூற விரும்பவில்லை. நான் வழக்கறிஞராவேன். நான் வழக்குகள் செய்வதில்லையென்றாலும், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அபாரமான திறமைகள் இருப்பதை நான் அறிவேன். ஆனாலும் அவர்கள் அரசின் பக்கமே நிற்பார்கள்.
வடக்கு கிழக்கு நிலைமையைப் பொறுத்தவரையில் ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்குகள் பல உள்ள நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நம்பகத்தன்மையில் நிச்சயமாக முரண்பாடு உள்ளது.
நான் எழுப்ப விரும்பும் இரண்டாவது விடயம் மனிதப் புதைகுழிகள் பற்றியதாகும்.
வடக்கு கிழக்கில் கொக்குத்தொடுவாய் மற்றும் மன்னாரில் பாலத்துக்கு அருகில் உள்ள சதொச கட்டிடதொகுதியில் மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ். செம்மணியில். மனித எச்சங்கள் காணப்படுகின்றன. அதனை நான் நேரில் சென்று பார்த்தேன். நான் அங்கு சென்று பார்த்தபோது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. நீதிமன்றுக்கு தெரிவிக்கப்படவுமில்லை. எங்கள் கட்சி உறுப்பினர்களில் ஒருவர் மயானத்தை நிர்வகிக்கும் குழுவிலும் உள்ளார். அவரிடம் பொலிஸில் முறைப்பாடு பதியச் சொன்னேன், அதன்பிறகு நீதிபதி தலையிட்டனர். மேலும் இந்த விவகாரம் ஆராயப்பட்டு வருகிறது.
ஆனால் இங்கே புதைகுழிகள் தொடர்பில் எந்த நெறிமுறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. என் அறிவுக்கு எட்டியவரை தெளிவான நெறிமுறை பின்பற்றப்படுவதில்லை. நிதிப்பற்றாக்குறை காரணம் காட்டப்படுகிறது.
இந்த விடயங்களை அவசரமாக கவனிக்க வேண்டும். மன்னார், கொக்குத்தொடுவாய் ஆகிய இரண்டு இடங்களிலும் இழுபறி நிலையே காணப்படுகிறது.
இதனால் யாழ்ப்பாணத்தில் செம்மணியிலும் ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்படலாம் என்று அஞ்சுகின்றோம். செம்மணி வழக்கில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதே முக்கிய குற்றச்சாட்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். அருகிலேயே அவை புதைக்கப்பட்டன. சந்திரிகா அரசாங்கத்தின் போது ஒரே இரவில் படுகொலை நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அங்கு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே செம்மணி புதைகுழிகளுடன் தொடர்புடைய உடல்களே அவை என்ற சந்தேகம் உள்ளது. அது மறைக்கப்பட்டு மயானத்தில் கொட்டப்பட்டுள்ளது என்று சந்தேகம் உள்ளது. அந்த பகுதிக்கு பாதுகாப்பு வழங்காமல் இருப்பதால், சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும்.
கௌரவ அமைச்சர் அவர்களே!
எங்களின் கட்சியின் நிலைப்பாடு இங்குள்ள கட்டமைப்பு பற்றியதே. இன முரண்பாட்டினால் ஏற்பட்ட மோதலின் விளைவாக, அந்தச் போர் முறை தொடர்பாக அரசிடம் நீதி கேட்டு போராடிவருவதை நீங்கள் அறிவீர்கள். முனைப்பு இருப்பதையும் அறிவீர்கள். இங்குள்ள கட்டமைப்பு ஒரு இனக்குழுவுக்கு எதிராகவே நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் கருத்து தெரிவித்தது. அந்தக் கருத்தை வெளியிட்டவர் உயர்ஸ்தானிகர் செயிட் என்று நினைக்கிறேன். இங்குள்ள கட்டமைப்பு துரதிர்ஸ்டவசமாக தப்பெண்ணத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இலங்கையில் உள்ளக விசாரணை என்பது சாத்தியமில்லை. இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற தலையீட்டையே கோரி நிற்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் அதுவரையில் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதனாலேயே குறைந்தபட்சம் நீங்கள் அந்த ஆதாரத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் என்று இந்தப் பிரச்சினைகளை எழுப்புகிறேன்.
நீங்கள் உள்ளகப் பொறிமுறையை பரிந்துரைக்கிறீர்கள். அது தொடக்கமல்ல என்பதே என் நிலைப்பாடாகும். ஆனால் குறைந்தபட்சம் இந்த ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
உங்களை விசாரிக்கும்படி நான் உங்களிடம் கேட்கப் போவதில்லை. ஏனென்றால், அது உங்களுக்குத் தெரிந்தே நடந்தது என்பதே எனது கருத்து. பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில், நிலைமை மாறும் என்று கூறுவதற்கு இதுவரையில் நம்பக்கூடிய வகையில் எதுவுமே நடக்கவில்லை.
மற்றைய விடயம்
வடகிழக்கில் பழங்கால வழிபாட்டு தலங்கள் உள்ளன.
ஒன்று குருந்தூர் மலை. மற்றொன்று வெடுக்குநாரி மலை. மற்றையது தையிட்டி. தையிட்டி பழமையான ஒன்றல்ல. குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாரி மலையில் தொல்லியல் துறையினர் தலையீடுசெய்துள்ளனர். இந்த விடயங்கள் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது நீதிமன்றம் சில உத்தரவுகளை வழங்கியிருந்தது..இது ஒரு தொல்பொருள் தளம், அது பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறி, நீதிமன்ற அனுமதியின்றி புதிய கட்டிடங்கள் எதுவும் அமைக்கப்படக்கூடாது என்றும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது. ஆயினும் நீதிமன்ற கட்டளையை மீறி பொலிஸ் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கட்டுமானப் பணிகள் நடந்தன.
தொல்லியல் திணைக்களமும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முழுமையான அனுசரணை வழங்கியது. தொல்லியல் துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே இவை நடைபெற்றன. சட்டமா அதிபர் திணைக்களமும் அரச திணைக்களங்கள் சார்பாகவே நின்றது. நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அவை நடைபெற்றன. நீதிபதி உள்ளே சென்று பார்த்தபோது, நீதிபதியின் உத்தரவுகளை மீறி இந்த தளங்களில் பல்வேறு கட்டுமானங்கள் நடந்துள்ளமையை அவதானித்திருந்தார். முல்லைத்தீவு நீதவானாக இருந்த த.சரவணராஜா பின்னர் அச்சுறுத்தப்பட்டார். சட்டமா அதிபரே சரவணராஜாவை அழைத்து அச்சுறுத்தியதாக பகிரங்கப்படுத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் மூலம் நீங்கள் பார்க்க வேண்டிய ஒன்று உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் கேட்கும்போது, இராணுவத்திற்காக, போலீஸ் துறைகளுக்காக முன்னிலையாக வேண்டும். மேலும் உணர்வுப்பூர்வமான வழக்குகள் இருக்கும்போது நலன் முரண்பாடு (conflict of interest) ஏற்படும். இதனால் முழு அமைப்பும் சரிகிறது. இது எங்களது அனுபவமாக உள்ளது. இப்படி நடக்கக்கூடாது.
சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் உச்ச நீதிமன்றங்களுக்கு நியமனம் செய்யப்படுவதற்கு விருப்பப்படுகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் 17 நீதிபதிகளில் நான்கு நீதிபதிகளைத் தவிர மற்ற அனைவரும் சட்டமா அதிபர் திணைக்கத்திலிருந்து வந்தவர்கள். மேல்முறையீட்டு நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டால், 15 நீதிபதிகளில் எட்டு பேர் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வந்தவர்கள். சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிவர்கள் அவர்களின் பணிஅனுபவத்தின் தன்மை காரணமாக அவர்கள் அரசின் பக்கம் சாய்ந்தும் அரசின் நலன்களைப் பாதுகாக்கும் விதமாகமே செயற்படுவார்கள். இதனால் நீதிமன்றங்களின் கட்டமைப்பின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
சட்டமா அதிபர் திணைக்கத்திலிருந்து பெரும்பான்மை நீதிபதிகள் நியமிக்கப்படுவதால் தொழில்முறை நீதிபதிகளுக்கு தீங்கிழைக்கப்படுகிறது. அவர்கள் கடினமான சேவையாற்றியும் 20 வருட சேவைக்குப் பின்னரும் அவர்களால் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக முடியாதுள்ளது.
தமிழ் நீதிபதிகளை எடுத்துக் கொண்டால் நீதியரசர் விக்னேஸ்வரன் தான் கடைசி தமிழ் நீதிபதி என்று நினைக்கிறேன். அல்லது இப்போது யாராவது இருக்கிறார்களா? அவர் தொழில்முறை நீதிபதியாக வந்தவர் என்பதால் எனக்கு இதுவே நினைவில் உள்ளது. சிங்கள நீதிபதிகளைப் பொறுத்தமட்டிலும் நிலைமை ஒன்றுதான். இது நியாயமற்றது. தொழில்முறை நீதிபதி என்பவர் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். அனைத்து இடங்களுக்கும் மாற்றப்படுவார். நாடு முழுவதும் மாற்றப்படுவார். இதனால் அவரது குடும்பமும் குழந்தைகளும் பாதிப்படைவார்கள். சில நேரங்களில் குழந்தைகளின் கல்வி பாதிப்படையும். அவர்கள் தங்கள் கடைமையில் உண்மையாக இருந்த போதிலும், அத்தகைய வெகுமதியைப் பெற முடியாமல் இருப்பதைக் கண்டறிந்து, உயர் பதவிகளை வழங்கவேண்டும்.
வடகிழக்கைப் பொறுத்த வரையில் குற்றவியல் நீதி மிக அடிப்படையான பிரச்சினையாக உள்ளது.
பாரிய அட்டூழியங்கள் மற்றும் போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தேவைப்படுகிறது.
கௌரவ அமைச்சர் அவர்களே!
உள்ளக விசாரணையையே உங்கள் அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இனப்படுகொலைக்கு நிகரான பாரிய குற்றங்கள் பற்றி உங்கள் அரசாங்கம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. ரோம் சட்டத்துக்கு உடன்படாமல் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றி உள்ளக விசாரணையின் அடிப்படையில் செயற்பட நீங்கள் சிந்திக்கப்போவதில்லை. பாரிய குற்றங்களை சட்டப்பூர்வமாக அணுகுவதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லை.
அதைச் செய்வதற்கான உள்கட்டமைப்பு உங்களிடம் இல்லை. நீங்கள் ஒருபோதும் நேர்மையாக செயற்படப்போவதில்லை. நீதிமன்றத்தின் முன் ஒரு வழக்குகூட கொண்டுவரபோவதில்லை என ஜனாதிபதியும் உங்கள் அரசாங்கமும் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளீர்கள். எந்த விருப்பமும் இல்லாமல் நீங்கள் ஒரு பயிற்சி பொறிமுறையைப் பெறப் போகிறீர்கள் என்றால் நீங்கள் முயற்சி செய்யப் போகிறீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் நீதி சம்பந்தப்படாத ஒன்றை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கிறீர்கள் . நீங்கள் கடந்த அரசாங்கள் போன்றே இதனை மூடிமறைக்கப் பார்க்கிறீர்கள் என்றால், கடந்த 16 17 ஆண்டுகளாக இருந்த முந்தைய அரசாங்கங்களைப் போலவே நீங்கள் கீழே செல்கிறீர்கள். அந்த அரசாங்கங்களில் இருந்து உங்களிடத்தில் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply