பெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது’ என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இது குறித்து, பாலச்சந்திரன் கூறியதாவது: பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில், நேற்று மாலை, 5.30 மணியளவில் கரையை கடக்க துவங்கி, நேற்றிரவு 10.30 மணிக்கு 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், கரையை கடந்துள்ளது. கரையை கடந்தாலும் புதுச்சேரிக்கு அருகே நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகர்ந்துள்ளது
கடந்த 3 மணி நேரமாக (அதிகாலை 3-6 மணி வரை) நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்து வரும் 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும். இதுவரை பதிவான தகவலின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதி கனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் 46 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் மாதம் 31ம் தேதி, 2004ம் ஆண்டு புதுச்சேரியில் 21 செ.மீ மழை பதிவாகி இருந்தது. ஆனால் தற்போது 46 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வானிலை எச்சரிக்கைகள், தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.