டேய், நான் யார் தெரியுமா? என்று கேட்டுக்கொண்டே என்னுடைய நண்பனின் கழுத்தை அந்த காவல்த்துறை அதிகாரி பிடித்து, இழுத்துச்சென்றார், அப்போது தன்னுடைய இடுப்பிலிருந்து துப்பாக்கிய உருவுவதை கண்டேன், அதற்குள் நண்பன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான், என, மட்டக்களப்பில் துப்பாக்கிப் பிரயோகத்தில் மரணமடைந்த மகாலிங்கம் பாலசுந்தரத்தின் நண்பனான விஜயராஜா தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர், நேற்றுமுன்தினம் மாலை நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மணல்லொறியின் சாரதியான மகாலிங்கம் பாலசுந்தரம் (வயது 43) மரணமடைந்தார்.
அப்போது, மகாலிங்கம் பாலசுந்தரத்தை ஓட்டோவில் ஏற்றிச்சென்று கொண்டிருந்த அவருடைய நண்பனான விஜயராஜா ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.
“நானும் பாலசுந்தரமும் நண்பர்கள், சஇராஜாங்க அமைச்சரின் வீடு அமைந்துள்ள மென்ரசா வீதியிலுள்ள வீடொன்றுக்கு மண் கொடுப்பது தொடர்பாக, கலந்துபேசிவிட்டு ஓட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தோம்.
அப்போது, இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாகவிருக்கும், வெற்றுக்காணியிலுள்ள மரமொன்று அருகில், அந்த மெய்ப்பாதுகாவலர். நின்றுக்கொண்டிருந்தார். அவரை கண்டதும், ஓட்டோவை நிறுத்துமாறு எனது நண்பன் கூறினான், எனினும், நிறுத்தாமலே நான் சென்றேன்.
ஓட்டோவை திருப்புங்கோ, கூப்பிடுகிறார், என்னவென கதைத்துவிட்டு போவோம் என்றார். நானும் ஓட்டோவை திருப்பிக்கொண்டு, இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக நிறுத்தினேன்.
வீதிக்கு வந்த மெய்பாதுகாவலர், என்னடா கைகாட்டிச் சென்றனீ என நண்பனிடம் கேட்டார். நண்பனோ, நீ யார்? என்றார் அப்போது மெய்பாதுகாவலர் இதை கேட்க நீ யார்? என்றார். இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்ம் ஏற்பட்டது.
இதனையடுத்து மெய்பாதுகாவலர், நண்பனின் கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டுபோனார். நான் யார் என தெரியுமா? காவல்த்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்டே, தனது இடுப்பிலிருந்து துப்பாக்கி மெய்பாதுகாவலர் எடுத்ததை கண்டேன். அந்த நொடிக்குள் எனது நண்பன், கீழே விழுந்துவிட்டான். இரத்த வெள்ளத்தில் கிடந்தான்” என்றார்.
அதன்பின்னர், என்னுடைய ஓட்டோவிலேயே அவனை ஏற்றிக்கொண்டு சென்றேன். எனினும் மரணித்துவிட்டான் எனத் தெரிவித்த ஓட்டோ சாரதி, நண்பனுக்கும் அந்த மெய்காவலருக்கும் இடையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தனக்குத் தெரியாது” என்றும் கூறினார்.