தமிழின அழிப்பு / நீதி மறுக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள்.
நமது தவறுகளும், தோல்விகளும்..
01.
இன அழிப்பை ஆவணப்படுத்தவும்/ பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்கவும் / இன அழிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் / தரவுகளை ஓரிடத்தில் குவித்து அனைத்துலக சமூகத்தின் கவனத்தைக் குவிக்கவும் ஒரு ஆய்வு மையத்தை / நிறுவனத்தை நிறுவ நாம் தவறி விட்டோம். எமது நீதிக்கான பயணத்தில்
மிக முக்கியமான படிமுறை இது.
(தமிழகத்திலுள்ள ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ ஒரு நினைவிடமாக மட்டும் தேங்கியுள்ளது. அது நிறுவனமயப் படுத்தப்படவில்லை.)
புலம் பெயர் அமைப்புக்களின் முதல் தவறும் கட்டமைப்பு சார் தோல்விக்கான அடிப்படையும் இதுதான்.
02.
2009 தமிழின அழிப்புடன் புலிகள் களத்திலிருந்து அகன்று போன இடைவெளியை இட்டு நிரப்ப / நீதிக்கான பயணத்தைத் தொடர தாயகம் – தமிழகம் – புலம் இணைந்த தமிழ் வெளியுறவுக் கொள்கை/ தமிழ்த் தேசிய சிந்தனைப் பள்ளி/ தமிழ் லொபி குழுமம் ஒன்றை உருவாக்குவதில் ‘நண்டு’ பண்பாட்டின் காரணமாக நாம் எப்படித் தோல்வியடைந்தோமோ, அது போன்றே இன அழிப்பு நாளை அதன் அரசியல் உள்ளடக்கங்களுடன் உள்வாங்கிய ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உலகளாவிய அளவில் நிறுவுவதிலும் தோல்வி கண்டிருக்கிறோம்.
இது எமது அரசியல் தோல்வி மட்டுமல்ல பண்பாட்டுத் தோல்வி. இன அழிப்பை பிரக்ஞை பூர்வமாக அணுகாத வரலாற்றுத் தோல்வி.
இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் பிரகாரம், அதன் வழி நடத்தலிலேயே நினைவு கூர்தல் வரைபடம்/ கோர்வை தயாரிக்கப்பட்டு உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் அந்த நாளை அனுட்டித்திருக்க வேண்டும்.
மாவீரர் வார/ நாள் நினைவுக் கோர்வைக்கு ஒப்பான ஒன்றாக அது இருந்திருக்க வேண்டும்.
நினைவு அழிப்பு மாத/ வார வரையறைகள் , அன்று நினைவு கூரும் / தீபமேற்றும் நேரம், ஒலிக்க வேண்டிய நினைவுப் பாடல் / கொள்கைப் பிரகடனம், தாயகம்/ தமிழகம் உட்பட உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் அன்றைய நாளில் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகள், அணிய வேண்டிய ஆடைகள், உணவு முறைகள், குறிப்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி குறித்த விபரங்கள் என்று இந்தப் பட்டியல் நீளம்.
எமது ஒட்டு மொத்த அரசியலும், நீதிக்கான பொறிமுறைகளும் இந்த நினைவு கூர்தல் உள்ளடக்கங்களில்தான் தங்கியுள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட ஒருவருக்கும் இது குறித்த எந்த புரிதலோ, விழிப்புணர்வோ கிஞ்சித்தும் கிடையாது.
இது அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புக்களின் அடுத்த கட்டமைப்பு சார் தோல்வி.
-பரணி கிருஸ்ணரஜனி-