ஐந்து பயணிகளோடு காணாமல் போன “டைட்டன்” சிறியரக நீர்மூழ்கியை கண்டுபிடிக்கும் தொடர் முயற்சியில் இன்னமும். முன்னேற்றம் ஏற்படாத நிலையிலும் தேடுதல் பணிகள் மேன்மேலும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று, மதியம் 13:00 (ஐரோப்பிய நேரம்) மணியோடு, நீர்மூழ்கியில் இருப்பவர்களுக்கான உயிர்வாயு தீர்ந்துவிடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த நேரம் கடந்து செல்லும் நிலையில், நீர்மூழ்கியில் சிக்கியிருப்பவர்களை உயிரோடு மீட்கலாமென்ற நம்பிக்கை குறைவடைந்து வருகிற சூழ்நிலையிலும் தேடுதல் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படும் அதேவேளை, நீர்மூழ்கியில் இருப்பவர்களுக்கான உயிர்வாயு தீர்ந்து விடுவதென்பது கண நேரத்தில் நடந்துவிடும் செயற்பாடல்ல எனக்கூறும், கனேடிய நீர்மூழ்கி வல்லுனரான “Ken LeDez”, உயிர்வாயு குறைவடையும் வேகத்தை பல்வேறு புறக்காரணிகள் கட்டுப்படுத்துமென தெரிவித்துள்ளதோடு, புறக்காரணிகளின் தன்மையை பொறுத்து, உயிர்வாயு விரைவாகவோ அல்லது மெதுவாகவோ தீர்ந்துபோகும் நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நோர்வே வைத்தியத்துறையை சேர்ந்த “Johan Edvard Tellum” தெரிவிக்கையில், நீர்மூழ்கியில் உயிர்வாயு தீர்ந்துபோகும் நிலையில், நீர்மூழ்கியில் சிக்கியிருப்பவர்களுக்கு தலைவலி, காதுகளில் இரைச்சல் உள்ளிட்ட உபாதைகள் தோன்றுமெனவும், தொடர்ச்சியாக மயக்கநிலையும் ஏற்படுமெனவும், மயக்க நிலையை தொடர்ந்து இரண்டு மூன்று நிமிடங்களிலேயே மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இறுதியாக மரணம் சம்பவிக்கும் என தெரிவிக்கும் அதேவேளை, உயிர்வாயு திடீரென இல்லாமற்போகும் நிலையொன்று ஏற்படும்போது, அவர்கள் மிக விரைவான மரணத்தை தழுவவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுமெனவும் தெரிவிக்கிறார்.
நீர்மூழ்கி வெளியுலகத்துடனான அதன் தொடர்பிலிருந்து காணாமல் போனதற்கு பல்வேறு கரணங்கள் இருக்க முடியுமெனினும், சுமார் 1300 மீட்டர்கள் ஆழம் வரையே செல்லக்கூடிய வல்லமையை கொண்டிருக்கும் மேற்படி நீர்மூழ்கி, 3800 மீட்டர்கள் ஆழத்தில் இருக்கும் “டைட்டானிக்” கப்பலின் சிதைவுகளை நெருங்கும் போது, நீரடி அமுக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அதனது கட்டுமானம் உடைந்திருக்கும் பட்சத்தில், நீமூழ்கிக்குள் கடல்நீர் புகுந்து, அதிலுள்ள அனைவரும் உடனடியான மரணத்தை தழுவியிருக்கக்கூடிய அபாயமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.