நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது! – 15 சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு.

You are currently viewing நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது! – 15 சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு.

இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக் கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன.

அரசாங்கம் ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டிருக்கும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையிலான கூட்டறிக்கையொன்றை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, மனித உரிமைகள் அபிவிருத்திக்கான நிலையம், சட்டம் மற்றும் மனித உரிமைகள் நிலையம், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்திப் பேரவை, சமத்துவத்துக்கான யாழ். சிவில் சமூகம் உள்ளிட்ட 15 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தன.

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

சமூகங்கள், குறிப்பாக உள்நாட்டுப் போரினால் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் சமூகங்கள் எதிர்கொண்ட மீறல்கள் மற்றும் துயரங்களை தீர்ப்பதில் உண்மை கண்டறிதல் முக்கிய பங்கு வகிக்கின்றது என நாம் நம்புகின்றோம்.

இருப்பினும், இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் எந்தவொரு ஆணைக்குழு அல்லது நியாய சபையிலும் பாதிக்கப்பட்ட சமூகம் நம்பிக்கையற்றதாக காணப்படுகிறது.

இவ்விடயத்தில் கடந்தகால அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் உண்மையை கண்டறியும் செயன்முறை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் இழைத்தோரை பொறுப்புக்கூறச் செய்யும் செயன்முறை ஆகியவற்றை இழுத்தடிக்கும் நோக்கம் கொண்டதாகவே அமைந்திருந்தது.

வெவ்வேறு அரசாங்கங்களினால் கடந்த 30 வருடகாலமாக உருவாக்கப்பட்டுவரும் ஆணைக்குழுக்களின் வரிசையில் இப்போது புதிதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இணைந்திருக்கின்றது. கடந்தகால ஆணைக்குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளில் பெரும்பாலானவை இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை.

அவ்வாறிருக்கையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? வெளிப்படையாக பேசும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலதரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் பின்னணியில், அவர்களை மீண்டுமொரு முறை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோருவது ஏற்புடையதா?

பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டறியப்படுவது இலங்கையில் வருடாந்தம் இடம்பெறும் நிகழ்வாக மாறிவிட்டது. இதுகுறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான முனைப்பு எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.

இதுகுறித்த விசாரணைகளுக்கு அவசியமான நிபுணர் குழுவொன்றை அமைத்து, அவசியமான நிதியை ஒதுக்கீடு செய்து, விசாரணை செயன்முறைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவற்றுக்கு இடையூறு விளைவிப்பதே அரசாங்கத்தின் வழமையான செயற்பாடாகக் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்துமேயானால், முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை தயாரித்தல், பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் வாக்குமூலம் வழங்குவதை தவிர்க்கும் வகையில் முன்னைய ஆணைக்குழுக்களிடம் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை தொகுத்தல், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவித்தல், வடக்கில் நிலவும் மிதமிஞ்சிய இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்தல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை மீளாய்வு செய்தல், இதன்போது ஆலோசனை செயலணி முன்வைத்த பரிந்துரைகளை கவனத்திற்கொள்ளல், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் பாரிய மனிதப்புதைகுழிகள் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறுபட்ட விரிவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

இவற்றை நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குமேயானால், அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். பாதிக்கப்பட்ட தரப்பினர் நீண்டகாலமாக போராடி பெற்றுக்கொண்ட சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply