பதுங்கு குழிகளில்
நாம் உறங்கிப் பழகிய நாட்களை
பெரும்பாலும்
யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்
வெளிச்சச் சிறகுகள் உடுத்தி
ஆகாயப் பரப்பில்
புடமிட்ட கழுகுகள்
எம் உடல்களை
இரும்பாலும் புகையினாலும்
சீறி சிதைத்ததை
யாரும் புன்னகையாய்
நினைத்திருக்க மாட்டீர்கள்
சாத்தான்களின்
தீவுகளிற்குள்
எம் சரித்திரத் தட்டுக்கள்
தடம்புரண்டோடியதை
யாரும் அறியாமல்
இருந்திருக்க மாட்டீர்கள்
இன்று மரணிப்பவர்களை
அடக்கம் செய்ய இடங்கள் இல்லை
என்பதை உலக நாடுகளே
உயிரோட்டமாய் பேசுகிறார்கள்
கண்ணீரையும் வலிகளையும்
உணர்ந்து உருகிப் போகிறார்கள்
நாங்களும் அப்படித்தான்
அந்தக் கடைசி நாட்களில்
மரணித்தவர் உடல்களை
ஆங்காங்கே விட்டவர்களாய்ச் சென்றோம்
ஏன் எம்மவர் பிணங்கள் மீது
பாலம் செய்தே
நந்திக்கடலைக் கடந்தோம்
புழுக்களிற்கும் பூச்சிகளிற்கும்
விருந்தோம்பல் செய்தோம்
ஆம் அன்றே நாங்கள்
கொல்லப்பட்டவர்களாய்த் தான்
கொண்டு வரப்பட்டோம்
பட்டினி கிடப்பதொன்றும்
எங்களுக்கு புதிதான ஒன்றல்ல
தனிமைப் படுத்தலொன்றும்
அவ்வளவு பெரும் சுமையல்ல
இறப்பின் பிரிவும் உறவின் இழப்பும்
நாம் கற்றுக் கொண்டவை தான்
ஆனாலும் அன்று மூடிய
சில நாடுகளின் கண்கள்
சில நாடுகளின் காதுகள்
மரத்துப் போன
சில நாடுகளின் உடல்கள்
இன்றுதான் விழித்துக்கொண்டன
கொரோனாவின் பிடியில்
இனியாகிலும் ஒடுக்குமுறையும்
அடக்குமுறையுமில்லா
மனிதம் வாழட்டும்
ஈடு இணையில்லா அன்பு நிலைக்கட்டும்
நாங்கள் வலித்துப் போனவர்கள் தான்
ஆனாலும் ஒதுங்கிப் போனவர்கள் அல்ல