நாட்டில் தமிழர்கள் வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா?

You are currently viewing நாட்டில் தமிழர்கள் வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா?

இந்த நாட்டில் தமிழர்கள் இருக்கக்கூடாது அல்லது வாழக்கூடாது என அரசு நினைக்கின்றதா? என கேள்வியெழுப்பிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ்.ஸ்ரீதரன் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவுறுவதாக சொல்லப்படுகின்ற நிலையில் கூட தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

செயற்பாட்டாளர்கள் செயற்பட முடியாதுள்ளது. தடுக்கப்படுகின்றார்கள். விசாரிக்கப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பற்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

வவுனியா தோணிக்கல்லை சேர்ந்த முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்கின்ற அரவிந்தன் கடந்த 2024 -03-26 ஆம் திகதியன்று பயங்கரவாத் குற்றத்தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான எட்டரை ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் முன்னாள் போராளிகளினதும் அவர்களின் குடும்பங்களினதும் கல்வி , பொருளாதார நெருக்கீடுகளை தீர்க்கும் மனிதாபிமான செயற்பாடுகளை புலம்பெயர் நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்போடு முன்னெடுத்தும் போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவராக இருந்து பலதரப்பட்ட சமூகப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

ஆனால் இவர் மீது ரி.ஐ.டி. யினர் சுமத்தியுள்ள பொய் குற்றச்சாட்டுக்களான பயங்கரவாத்திற்கு உதவியளித்தல், விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்தல் போன்ற எந்த செயற்பாடுகளிலும் இவர் ஈடுபட்டிருக்கவில்லை. மனிதபிமான பணிகளில் ஈடுபட்ட ஒருவரை வாக்குமூலம் பெறுவதென்ற போர்வையில் கொழும்பிலுள்ள ரி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து அங்கு வைத்து கைது செய்து சிறையில் அடைப்பதென்பது இந்த நாட்டின் அதி உச்ச எதேச்சாதிகாரத்தையே மீண்டும் காட்டியுள்ளது.

சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களது இயங்கு நிலையை முடக்கும் வகையிலும் திட்டமிட்ட வகையில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்தனை உடனடியாக விடுதலை செய்ய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் முன்னாள் போராளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

முன்னாள் போராளிகள், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் இவ்வாறு அடிக்கடி 4 ஆம் மாடிக்கு அழைத்து விசாரிக்கப்படுவதும். நாட்டில் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply