03.03.2021
சண்முகம் கிற்லர் அவர்கள்
“நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு
தமிழீழ விடுதலைக்காகவும் தமிழ்மக்களின் விடிவிற்காகவும் கனடாவில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த சண்முகதாசன் கிற்லர் அவர்கள்.28.02.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
கனடா வாழ் தமிழ்மக்களிடையே விளையாட்டுத்துறை, கலைபண்பாட்டுக்கழகம் ஊடாக பல இளையோர்களிடம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தேவையைக் கொண்டுசெல்வதில் பெரும்பங்காற்றித் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்திற்கேற்ப செயற்பட்ட தேசியச் செயற்பாட்டாளராவார்.
சண் மாஸ்ரர் என எல்லோராலும் அறியப்பட்ட இவர், சிறந்த விளையாட்டு வீரராக, படைப்பாளியாக, நாடக நடிகராக,நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பல துறைகளிலும் தனது தனித்திறமைகளை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாது, தான் ஈடுபட்ட அனைத்துத் துறைகளிலும் பலரை உருவாக்கி, அவர்களையும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் பங்காளர்களாக்கிய ஆளுமைமிக்க ஆசானாகத் திகழ்ந்தவர்.
தமிழர்தம் விடுதலையை முன்நகர்த்தும் முகமாக 1989ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் நடைபெற்ற அறவழிப்போராட்டங்கள், விளையாட்டுக்கள், எழுச்சிநிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்துச்செயற்பாட்டிலும் முன்னின்று செயற்பட்டவரும் 2009ஆம் ஆண்டிற்குப்பின்ஏற்பட்ட நெருக்கடிகளையெல்லாம் எதிர்கொண்டு, தொடர்ந்தும் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கைகளைச் சளைக்காது முன்னெடுத்தவராவார்.
இத்தகைய ஆற்றலும்,விடுதலை வீச்சும்கொண்ட பற்றுறுதிமிக்க ஆசானை தமிழ்மக்கள் இழந்துநிற்கின்றனர். இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்,நண்பர்களின் பிரிவுத்துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், சண்முகதாசன் கிற்லர் அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”