இலங்கையில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படும் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவையும்!

You are currently viewing இலங்கையில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படும் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவையும்!

நாளை (20.04.2020) முதல் வடமாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட உள்ளது தாங்கள் அறிந்ததே.

ஆனாலும் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரணநிலை நிலவுவதன் காரணமாக பொதுமக்கள் பின்வரும் விடயங்களை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

1. யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை அடையாளங் காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர ஏனையவர்கள் இயலுமானவரை வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. மேலும் நாட்டில் கொரோனா அபாயம் முற்றாக நீங்கும் வரை ஏனைய மாவட்டங்களிலும் வெளியில் நடமாடுவதை இயன்றவரை குறைத்துக் கொள்ளுங்கள். மிகவும் அவசியமான தேவைகளற்று வெளியில் செல்வது, சிறுசிறு விடயங்களுக்காக பல தடவை வெளியில் செல்வது போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. சனநெருக்கமான இடங்கள், சன நெருக்கமான போக்குவரத்துச் சேவைகள் போன்றவற்றை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத இடத்து அத்தியாவசிய தேவை கருதி வெளியில் செல்வதாயின் கட்டாயமாக ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்

3. பொதுப் போக்குவரத்து சேவையிலீடுபடும் வாகனங்கள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசிப் பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களையும் தினமும் கிருமித் தொற்று நீக்கத்துக்கு உட்படுத்தவும்.

4. அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், ஏனைய பொதுமக்கள் அல்லது பணியாளர்கள் எனப் பலர் கூடக்கூடிய இடங்களில் பொருத்தமான, உரிய கைகழுவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவற்றைக் கட்டாயமாக்கிக் கொள்ளவும்

5. மேலும் தனிநபர்களுக்கிடையிலானசமூக இடைவெளியை பேணுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. ஒன்று கூடல்கள், கூட்டங்கள், சுற்றுலாக்கள், சமயநிகழ்வுகள், பொதுவழிபாடுகள், கோயில் திருவிழாக்கள், விளையாட்டுநிகழ்வுகள், வீட்டுவைபவங்கள் போன்றவை மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

7. நீண்டநாள்களுக்குப் பின் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதால் பெருமளவானோர் முடிதிருத்தகங்களை நாட வேண்டியிருக்கும். இங்கும் சமூக இடைவெளியைப் பேணவும்.

8. வெளியில் சென்று,வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம் நன்றாககுளித்தல் நல்லது. ஆகக்குறைந்தது கைகளையாவது சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரம் கொண்டு கழுவுங்கள். வீட்டில் உள்ள போதும் அடிக்கடி கைகளை உரியமுறையில் கழுவுங்கள்.மேலும் கண், மூக்கு,வாய்,முகம் போன்றவற்றைத் தொடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

9. உங்களுக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகளாகிய தொண்டைநோ, வறட்டு இருமல், காய்ச்சல் போன்றஅறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால் முகக் கவசம் அணிந்து கொண்டு உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை அணுகுங்கள்.

வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாணசுகாதாரசேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்.
19.04.2020

பகிர்ந்துகொள்ள