நாளை வடக்கு, கிழக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

You are currently viewing நாளை வடக்கு, கிழக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

நாளை தாயகம் தழுவிய பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன. கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் மற்றும் ஜெனீவா விடயங்களை கையாள்வதற்கு பொறிமுறையை உருவாக்குவதற்கான கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட சம்பவத்தை ஒன்றிணைந்து வெளிப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய ரீதியில் கதவடைப்புப் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் அழைப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ளுமாறும் குறித்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக சந்திப்பில் ஏழு கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் இணைந்து குறித்த அழைப்பினை விடுத்திருந்தனர.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செ.கஜேந்திரன், தமிழ் தேசியக் கட்சி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைக் சுட்டணி சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈழத் தமிழர் சுயாட்சிகக் கழகம் சார்பில் அனந்தி சசிதரன் மற்றும் சிவில் அமைப்புக்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய ரீதியில் வர்த்தக செயற்பாடுகளை நிறுத்தியும், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை பகிஷ்கரித்தும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள