பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் யாழ்.நகரத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சிவபூமி அறக்கட்டளைiயால் அமைக்கப்பட்ட ‘சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்’ இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இந்த அரும்பொருள் காட்சியகம் திறக்கப்பட்டது.தமிழ் பண்பாடுகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்று கோமாதா வழிபாடு, விநாயகர் வழிபாடு, அரும்பொருள் காட்சியகத்தின் பெயர்ப்பலகை திரை நீக்கம் இடம்பெற்று சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகத்தின் நுழைவாயிலை நல்லை ஆதின குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திறந்துவைத்தார்.
அபிராமி கையிலாயபிள்ளை அம்மையாரால் அரும் பொருள்காட்சியகத்தின் முதலாவது தளம் திறந்துவைக்கப்பட்டது. கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை அமரர் பகவதிதேவி கந்தப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரது உறவுகளால் வழங்கப்பட்ட நிதியுதவியில் இரண்டாவது தளம் அமைக்கப்பட்டதால் அவரது மாணவர் ஆறுமுகம் சிறிஸ்கந்தமூர்த்தி அதனைத் திறந்துவைத்தார்.
கந்தர்மடத்தைச் சேர்ந்த அமரர் செல்வி வைத்தியலிங்கம் நினைவாக அமைக்கப்பட்ட மூன்றாவது தளத்தை சட்டத்தரணி அமரர் நீலகண்டனின் துணைவியார் திறந்துவைத்தார்.
தமிழ் மன்னர்களின் சிலைகளை அமைக்க நிதியுதவியளித்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரின் பழைய மாணவனும் மருத்துவ நிபுணருமான நிமலன் மகேசன் அவர்களின் நினைவுப் பதிவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் பஞ்சலிங்கம் திரைநீக்கம் செய்தார்.
மேலும் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன, சிறிதரன் ,சரவணபவன் இந்திய துனைத்தூதுவர் பாலச்சந்திரன் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.சார்ஸ் வடக்கு மாகாண அவைத்தலைவர் சிவஞானம், பல்கலை பேராசிரியர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

