மக்களின் பணத்தை ஏப்பமிட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, மகன் இந்தியாவில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள், தமது உண்மையான விபரங்களை மறைத்து ஆரம்பத்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில் இலங்கையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் என தெரிய வந்துள்ளது.
வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில், இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு பைப்பர் படகில் திருகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி (45) மனைவி சல்மா பேகம் (35) மகன் அன்சார் (10) என்ற பெயரில் கோடியக்கரை சவுக்கு காட்டில் சென்று இறங்கினர்.
இந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் விலை மோசடி செய்து தலைமறைவான நிலையில் பல்வேறு பிரதேசங்களில் நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்கலாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கியதுடன் கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1,200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.