மனித உரிமைகளிற்கு எதிராக நினைவுகூரல் உரிமையினை மறுக்கின்ற சிறிலங்கா அரசின் செயலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று சனிக்கிழமை (18) முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் இடம்பெற்ற காவல்துறையினரின் அநாகரிக மற்றும் அடாவடியான செயலை கண்டித்தே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறிலங்கா காவல்துறையில் அடாவடியென்பது அண்மைக்காலங்களில் பெருமளவில் அதிகரித்திருப்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.
கடந்த (27) அன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை சிறிலங்கா காவல்துறை அத்துமீறி பல்கலைக்கழக முதன்மை வளாகத்தினுள் நுழைந்து குழப்பங்களை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியிருந்ததோடு, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் வளைவினை அகற்றிச் சென்றமையினையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.
தமிழர் தாயகத்தில் கேள்விக்குள்ளாக்கும் நினைகூரும் உரிமை தொடர்பில் கடந்த (16)வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு மாகாணத்தில் முடிவற்றுத் தொடரும் இதுபோன்ற நினைவேந்தல்களை தடுக்கும் மற்றும் அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது அவதானிப்பினைச் செலுத்தியிருந்தது.
கிழக்குப் பல்கலையில் தமிழ் மாணவர்கள் தமது பெரும்பாண்மையினை இழந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று பயணிக்கும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர்ச்சியானதும் தன்னெழுச்சியானதுமான செயற்பாடுகளை தடுக்கும் செயற்பாடுகளின் அங்கமே இதுபோன்ற விதிகளிற்குப் புறம்பான ஒடுக்குமுறைகளின் நோக்கமாகும்.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் காத்திரமான முன்னோக்கிய பயணங்களிற்கு பிராந்தியத்தின் சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் பக்கபலமாகத் திகழவேண்டும் என்பதோடு, பல்கலைக்கழகத்தை சமூகத்தினுள்ளும் சமூகத்தை பல்கலைக்கழகத்தினுள் கொண்டு செல்வதுமே பொருத்தமான வழியாகும் என்பதனைப் பதிவு செய்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.