நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்:ஆஸ்திரேலிய அணி நிதான தொடக்கம்லபுஸ்சேன், சுமித் அரைசதம் அடித்தனர்.

  • Post author:
You are currently viewing நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்:ஆஸ்திரேலிய அணி நிதான தொடக்கம்லபுஸ்சேன், சுமித் அரைசதம் அடித்தனர்.

மெல்போர்னில் நேற்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் நிதான போக்கை கையாண்டது. லபுஸ்சேன், சுமித் அரைசதம் அடித்தனர்.
‘பாக்சிங் டே’ டெஸ்ட்
ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் நேற்று தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்துக்கு மறுநாள் நடக்கும் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க இந்த டெஸ்டில் ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி ஜோ பர்ன்சும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் ஓவரிலேயே யார்க்கர் பந்தில் ஜோ பர்ன்ஸ் (0) கிளன் போல்டு ஆனார். அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் வந்தார்.
லபுஸ்சேன் அரைசதம்
ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் இருந்தது. நியூசிலாந்து பவுலர்கள் ஷாட்பிட்ச் தாக்குதலை தொடுத்து நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நிதானமாக விளையாடினர். வார்னர் 41 ரன்களில் (64 பந்து, 3 பவுண்டரி) ஸ்லிப்பில் நின்ற டிம் சவுதியிடம் பிடிபட்டார்.
தொடர்ந்து முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் நுழைந்தார். அவரும், லபுஸ்சேனும் கூட்டணி போட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர். முந்தைய 3 டெஸ்டுகளில் சதம் விளாசியிருந்த லபுஸ்சேன், இந்த இன்னிங்சில் அரைசதத்தை கடந்த நிலையில் ஆட்டம் இழந்தார். கிரான்ட்ஹோம் வீசிய பந்தை தொடாமல் விட வேண்டும் என்று நினைத்து பேட்டை மேல்வாக்கில் தூக்க முயன்றார். அதற்குள் சீறிப்பாய்ந்த பந்து அவரது முழங்கையில் பட்டு ஸ்டம்பையும் பதம் பார்த்தது. லபுஸ்சேன் 63 ரன்களுடன் (149 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த மேத்யூ வேட் தனது பங்குக்கு 38 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.
ஸ்டீவன் சுமித் 77 ரன்
இன்னொரு பக்கம் நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவன் சுமித் அரைசதத்தை கடந்து அணிக்கு வலுவூட்டினார். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் (ரன்ரேட் 2.85) சேர்த்துள்ளது.
ஸ்டீவன் சுமித் 77 ரன்களுடனும் (192 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிராவிஸ் ஹெட் 25 ரன்களுடனும் (56 பந்து, 3 பவுண்டரி) களத்தில் உள்ளனர். முன்னதாக சுமித் 39 ரன்கள் எடுத்த போது ஆஸ்திரேலிய வீரர்களில் டெஸ்டில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பலை (7,110 ரன்) பின்னுக்கு தள்ளினார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு
இதற்கிடையே சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர் 26 வயதான மிட்செல் ஸ்வெப்சன் சேர்க்கப்பட்டு உள்ளார்.
சாதகமான சூழல் இருந்தால் சிட்னி டெஸ்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது குறித்து பரிசீலிப்போம் என்று ஆஸ்திரேலிய தேர்வாளர் டிரெவோர் ஹான்ஸ் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள