ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 77 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 25 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து விளையாடினர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவன் சுமித் (85 ரன்), நீல் வாக்னெர் வீசிய ‘பவுன்சர்’ பந்தை எம்பி குதித்து தடுக்க முயற்சித்த போது அது கையுறையில் பட்டு தெறித்தது. அதை ‘கல்லி’ திசையில் நின்ற நிகோல்ஸ் ஒற்றைக்கையால் கேட்ச் செய்தார்.
இதன் பின்னர் டிராவிஸ் ஹெட்டுடன், கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். கொளுத்தும் வெயிலில் நியூசிலாந்தின் தாக்குதலை திறம்பட சமாளித்த இவர்கள் தேனீர் இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
ஸ்கோர் 434 ரன்களை எட்டிய போது, டிம் பெய்ன் (79 ரன், 138 பந்து, 9 பவுண்டரி) வாக்னெரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின் உதவியுடன் நியூசிலாந்து வீரர்கள் சாதகமான தீர்ப்பை பெற்றனர். 7-வது அரைசதத்தை கடந்த டிம் பெய்ன் இதுவரை சதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்ன்-ஹெட் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் (263 பந்து) திரட்டியது. அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். ஹெட் 114 ரன்களில் (234 பந்து, 12 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.
முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 155.1 ஓவர்களில் 467 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கடைசி 5 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி 33 ரன்னுக்குள் பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. நியூசிலாந்து தரப்பில் நீல் வாக்னெர் 4 விக்கெட்டுகளும், டிம் சவுதி 3 விக்கெட்டுகளும், கிரான்ட்ஹோம் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர் டாம் புளுன்டெல் (15 ரன்) விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் பிடிபட்டார்.
அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் (9 ரன்) பேட்டின்சன் வீசிய ஷாட்பிட்ச் பந்துக்கு இரையானார். அதாவது ஆப்-சைடு வாக்கில் வந்த பந்தை லெக்சைடில் தூக்கியடித்த போது, அது சரியாக ‘கிளிக்’ ஆகாமல் எழும்பியது. சிறிது தூரம் ஓடிச்சென்று விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கேட்ச் செய்தார்.
3-வது விக்கெட்டுக்கு வந்த அனுபவ வீரர் ராஸ் டெய்லரும் வந்த வேகத்தில் வெளியேறி இருக்க வேண்டும். பேட்டின்சனின் பந்து வீச்சில் அவருக்கு எல்.பி.டபிள்யூ. வழங்கப்பட்டது. பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது, பந்து ஸ்டம்பை விட்டு விலகிச் செல்வது தெரிந்ததால் தப்பித்தார்.
2-வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 9 ரன்னுடனும் (51 பந்து), ராஸ் டெய்லர் 2 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
டி.ஆர்.எஸ். குறித்து டிம் பெய்ன் சந்தேகம் – டிம் பெய்ன்
இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு பேட்டி அளித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், தனக்கு டி.ஆர்.எஸ்.-ன்படி அவுட் அளித்தது சரியானது அல்ல என்று குற்றம் சாட்டினார். பந்து பிட்ச் ஆன விதத்தை பார்க்கும் போது அது ஸ்டம்பை தாக்குவது கடினமே என்று கூறினார். இதே போல் கிரீசுக்குள் வைத்து பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லருக்கு பந்து காலுறையில் படாமல் இருந்திருந்தால் ஸ்டம்பை தான் பதம் பார்த்து இருக்கும். ஆனால் தொழில்நுட்பத்தில் வேறு விதமாக காட்டியது கோபத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. இந்த டி.ஆர்.எஸ். முறையில் எனக்கு சில சந்தேகம் இருக்கிறது. தொழில்நுட்பம் என்பது துல்லியமாக இருக்க வேண்டும் என்றும் டிம் பெய்ன் குறிப்பிட்டார்.