நியூசிலாந்தில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையில் பிறந்த வனுஷி வோல்ட்டர்ஸ் என்ற தமிழ்ப் பெண் வெற்றி பெற்றுள்ளார். ஆக்லாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள மேல் துறைமுக தொகுதியில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட வனுஷி வோல்ட்டர்ஸ் 14 ஆயிரத்து 142 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய கட்சி வேட்பாளர் ஜேக் பெஸன்ட்டுக்கு 12 ஆயிரத்து 727 வாக்குகள் கிடைத்துள்ளன.
இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட ஒருவர் நியூசிலாந்து நாடாளுமன்றத்துக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
மனித உரிமைகள் சட்டத்தரணியான வனுஷி, தனது 5 வயதில் பெற்றோரான பவித்ரா மற்றும் ஜனா ராஜநாயகம் ஆகியோருடன் நியூசிலாந்தில் குடியேறியிருந்தார்.
இவரது பேர்த்தி லூசியா நேசம் சரவணமுத்து இலங்கையின் அரசவையில் கொழும்பு வடக்கு தொகுதி உறுப்பினராக 1931ஆம் ஆண்டில் இருந்து 1947 ஆம் அண்டு வரை பதவி வகித்திருந்தார்.
அத்துடன், இவரது பேரன் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநரின் தெரிவு செய்யப்பட்ட முதலாவது முதல்வராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.