இலங்கையில் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று நாங்கள் கனடாவை சேர்ந்த தமிழர்கள் மற்றும் உலகலாவிய ரீதியில் உள்ள தமிழ் சமூகத்தினருடன் இணைந்து இலங்கையின் பயங்கரமான கறுப்பு ஜுலை சம்பவங்களை நினைகூருகின்றோம்.
1983 ஜுலை மாதம் நீண்டகால பதற்றமும் அமைதியின்மையும் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இறுதியில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக மாறியது. –பின்னர் நாட்டை 26 வருட ஆயுதமோதலுக்குள் தள்ளியது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதமோதல் பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்றது. பலரை நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது,நாட்டின் சமூகத்தினர் மத்தியில் ஆறாத காயங்களை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலைக்கு பிந்தைய மாதங்களில் கனடாவை சேர்ந்த தமிழர்களின பரப்புரை காரணமாக கனடா அரசாங்கம் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
இலங்கையிலிருந்து 1800 தமிழர்கள் கனடாவில் குடியேறுவதற்கும் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக கட்டியெழுப்புவதற்கும் உதவியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கனடா தமிழர்கள் புலம்பெயர் சமூகத்தின் பெரும்பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். மேலும் அவர்கள் வலுவான அனைவரையும் உள்ளடக்கிய கனடாவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா அரசாங்கத்தின் சார்பில் கறுப்பு ஜூலையின் போதும் அதன் பின்னரும் துயரங்களை அனுபவித்தவர்களுக்கும் உறவுகளை இழந்தவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆயுதமோதல் 2009 இல் முடிவிற்கு வந்தது. எனினும் நாட்டில் உள்ள அனைவருக்கும் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் பாடுபடவேண்டும்,இதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையை பெறக்கூடிய அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம்.இந்த இலக்கை நோக்கி பாடுபடும் அனைவருக்கும் கனடா தனது ஆதரவை வழங்குகின்றது என தெரிவித்துள்ளார்.