நிராகரிக்கப்பட்ட தலைவர்களை இனிமேல் நம்பி நாட்டின் ஆட்சியை ஒப்படைக்கக்கூடாது என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் முன்னோடியில்லாத அரசியல் குழப்பம் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளது.
நாடு ஆழமான நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் ஸ்திரமற்ற நிலையில் உள்ளதாகவும், தற்போதைய நெருக்கடியானது, தாய்நாட்டை முற்றாக முடக்கி வைத்துள்ளதாகவும் கத்தோலிக்க ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது அரசியல் வேறுபாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நேர்மையான, அனைவரின் நம்பிக்கையையும் பெறக்கூடிய ஒரு இடைக்கால ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிக்க ஒருமித்த கருத்துக்கு வருமாறு கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும் என்று கத்தோலிக்க ஆயர் பேரவை எச்சரித்துள்ளது.
அத்துடன், பொதுத் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்தக்கூடிய தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம் மக்கள் சுதந்திரமாக தமது வாக்குரிமையை வெளிப்படுத்த அனுமதிக்குமாறு பொறுப்பான தலைவர்களை இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்துகின்றனர்.