அனைத்துலகத் தொடர்பகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கட்டமைப்புசார் பொறுப்பு நிலைகளிலிருந்தும் செயற்பாடுகளிலிருந்தும் விடுதலைப் புலிகளின் சுவிஸ் பொறுப்பாளர் வி. ரகுபதி நீக்கப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் உருவாகக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மரபுரீதியான நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி, சுவிஸ் கிளையின் துணைப்பொறுப்பாளர் வி.ரகுபதி அவர்கள், தேசியத் தலைவர் தொடர்பான உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பரப்பிவருகிறார்.
ஏற்கனவே கடந்த 2023 மாவீரர்நாளில், தேசியத்தலைவரைச் சந்தித்தோமென்று கூறும் விடுதலைப்போராட்டத் தினைச் சிதைக்கும் குழுவொன்று, தேசியத்தலைவரின் மகள் துவாரகா என்றுகூறி போலியாக ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.
அதன் பின்னர், இதுவொரு போலி நாடகமென எமது மக்கள் அதனை நிராகரித்திருந்தார்கள். இக்குழுவின் குறிக்கோள் யாதெனில், தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட அனைத்துலகத் தொடர்பகத்தையும் அதன் ஆளுகையின் கீழ் இயங்கும் கிளைகளையும் சிதைத்தழிப்பதேயாகும்.
இதன்மூலம், விடுதலைப்போராட்டச் சிந்தனையை மக்கள் மனங்களிலிருந்து அகற்றுவதாகும்.
இக்குழுவிலிருந்த பலர் உண்மை புரிந்து வெளியேறியள்ள நிலையில், புதிதாக ரகுபதியும் வேறு சிலரும் உள்வாங்கப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்திருந்தன.
இவற்றை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ரகுபதி அவர்கள், தேசியத் தலைவரைச் சந்தித்ததாகவும் ஆரத்தழுவியதாகவும் அவருடன் உணவருந்தியதாகவும் போன்ற கற்பனைக்கதைகளை உருவாக்கிக் கதைத்துவருகிறார்.
இயக்கத்தின் நிர்வாக ஒழுங்குகளை மீறி, சுவிஸ்கிளைப் பொறுப்பாளரின் ஒப்புதலின்றிப் பயணங்களை மேற்கொண்டு, தேசியத் தலைவரின் சிந்தனையைப் புறந்தள்ளி, தமிழீழத் விடுதலைப் போராட்டத்தினை வேரறுக்கும் குழுவொன்றினைச் சந்தித்து உரையாடி, தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளுக்கெதிரான தரப்புகளோடு இணைந்து மக்களைக் குழப்புகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றார்.
இவ்வாறாக, அனைத்துலகத் தொடர்பகத்திற்கும், சுவிஸ் கிளைக்கும் தெரியாமல் தான்தோன்றித் தனமாகச் செயற்பட்டு, தமிழீழத் தேசியத் தலைவரின் வீரப்பண்புகளையும் விடுதலைப்புலிகளின் மரபுவழிவந்த நிர்வாகப் பொறிமுறையையும் முற்றாக நிராகரித்து, சுவிஸ்கிளைப் பொறுப்பாளரும் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளரும் இனி நானே என்றும் இதனைத் தேசியத்தலைவர் அவர்களே சொன்னதாகவும் கிளைப்பொறுப்பைத் தனதாக்கிக்கொண்டார்.
இவ்வாறாக, தமிழீழத் தேசியத் தலைவரின் கட்டமைப்பு சார்ந்த நிர்வாக ஒழுங்கு விதிகளை மீறி, சுவிஸ் கிளைமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எதிராகச் செயற்பட்ட சுவிஸ் கிளையின் துணைப்பொறுப்பாளர் வி. ரகுபதி அவர்களை, அனைத்துலகத் தொடர்பகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கட்டமைப்புசார் பொறுப்பு நிலைகளிலிருந்தும் செயற்பாடுகளிலிருந்தும் நீக்கம் செய்கிறோம். எனவே, ரகுபதி அவர்களுடனான சகல தொடர்புகளையும் நிறுத்திக் கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். என தமிழீழ விடுதலை புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் பொறுப்பாளர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.