நோர்வேயின் கிழக்குப்பகுதியில், தலைநகர் ஒஸ்லோவை அண்டிய “Gjerdrum” பகுதியில் 30.12.2020 அன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னான தொடர் மீட்ப்புப்பணிகள் இரவு பகலாக தொடர்ந்துவந்த நிலையில், மீட்புப்பணிகள் நேற்றைய தினம் மாலையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதன் பின் மீண்டும் இன்று காலையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டாவது நபர் பற்றிய விபரம் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட அப்பகுதியில் சுமார் 100 மீட்டர்கள் தூரத்தில், மோப்ப நாய்களின் உதவியோடு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கும் காவல்துறை, மேலதிக விபரங்களை தெரிவிக்க மறுத்திருக்கிறது.
மிகவும் கடினமான காலநிலைக்கு மத்தியிலும், மிக ஆபத்தை எதிர்நோக்கினாலும், கடும் முயற்சியோடு மீட்புப்பணியாளர்கள் தேடுதல்களில் ஈடுபட்டு வருவதாகவும், நிலத்தில் சகதிக்குள் புதைந்திருக்கும் மகிழூந்துகள் அவதானிக்கப்பட்ட போது, அவற்றிலும் தேடுதல்கள் நடத்தப்பட்டாலும், யாரையும் இதுவரை உயிரோடு கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்ட 10 பேரில், இருவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 8 பேர் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.