தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலச்சரிவு மீட்பு நடவடிக்கைகளில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத மூவரையும் உயிரோடு மீட்க முடியாதென காவல்துறை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
காணாமல் போன 10 பேரில் எழுவர் சடலவ்களாக மீட்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் மாலையில் நாய் ஒன்று இடிபாடுகளுக்கிடையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்டபோது, நாய் உயிருடன் மீட்கப்பட்டமை தமக்கான நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக நேற்று மீட்பு அணி தெரிவித்திருந்ததோடு, காணமல் போன மூவரையும் உயிரோடு மீட்க போராடி வருவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மதியம் ஊடகங்களுக்கு விளக்கமளித்த காவல்துறை, காணமல் போன மூவரையும் உயிரோடு மீட்கமுடியுமென்ற நம்பிக்கையை தாம் கைவிட்டுள்ளதாகவும், எனினும் சடலங்களை மீட்கும் நடவடிக்கை தொடருமெனவும் தெரிவித்துள்ளது.
செய்தி மேம்பாடு:
17:35 – 05.01.2021
பிரேத பரிசோதனைகளின் பிரகாரம், இறந்த நிலையில் மீட்கப்பட்ட எழுவரும் மிகக்குறுகிய நேரத்தில் மரணித்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை, இன்னமும் கண்டுபிடிக்க முடியாத மூவரை தேடும் பணிகளின்போது, உயிர்தப்பியிருப்பவர்கள் இருக்கக்கூடிய இடங்கள் எல்லாவற்றிலும் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லையென்றும், அவர்களை உயிருடன் மீட்க முடியாதென்ற முடிவுக்கு வருவதற்கு இதுவும் காரணமெனவும் தெரிவித்துள்ளது.
இந்த முடிவை மிகுந்த வருத்தத்தோடும், ஆற்றாமையோடும் எடுத்ததாக தெரிவிக்கும் காவல்துறை, யதார்த்த நிலையை கருத்தில்கொண்டு தற்போது செயற்பட வேண்டியுள்ளதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் சதுப்பு நிலத்தினுள் புதையுண்டிருக்கும் நிலை இருக்குமானால், இறுக்கமாகிவரும் சதுப்புநிலம், உறைநிலை குளிர் போன்ற காரணங்களால், சுவாசிக்க முடியாமலும், உயிர்பிழைப்பதற்கு தேவையான ஆகக்குறைந்த உடல் வெப்பநிலையை கொண்டிருக்க முடியாமலும் அவர்கள் மரணித்திருக்கலாமென கருதப்படுகிறது.