துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் இருந்து உயிர் தப்பிய மக்களுக்கு மூன்று மாத கால விசா வழங்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் குடும்பத்தினரை ஜேர்மனியில் வரவழைக்கலாம், இது ஒரு அவசரகால உதவி என ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அமைச்சர் நான்சி ஃபேசர், ஜேர்மனியில் உள்ள துருக்கிய அல்லது சிரியா குடும்பங்கள், பேரிடர் பகுதியில் இருந்து தங்கள் நெருங்கிய உறவினர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்து வர அனுமதிக்க விரும்புகிறோம்.
இந்த முடிவை அதிகாரத்துவம் கட்டுப்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை அதிகாலையில் துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கத்திற்கு இதுவரை 29,896 பேர்கள் பலியாகியுள்ளனர். 85,616 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் ஃபேசர் தெரிவிக்கையில், தகுதியானவர்களுக்கு உடனடியாக விசா அனுமதிக்கப்படும், இந்த விசா மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
தங்கும் வசதி மற்றும் உரிய மருத்துவ சேவையை பெற இந்த மூன்று மாத கால விசா பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 2.9 மில்லியன் துருக்கி வம்சாவளி மக்கள் ஜேர்மனியில் குடியிருந்து வருகின்றனர்.
இதில் பதிக்கும் மேற்பட்டவர்கள் துருக்கி குடியுரிமையை பேணுகின்றனர். மட்டுமின்றி, 2015 மற்றும் 2016க்கு பின்னர் ஜேர்மனியில் சிரியா மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதுடன், தற்போது அவர்கள் எண்ணிக்கை 924,000 என கூறப்படுகிறது. 2014ல் ஜேர்மனியில் சிரியா மக்களின் எண்ணிக்கை 118,000 என இருந்தது குறிப்பிடத்தக்கது.