நீதிக்கான போரில் காலம் எடுக்கலாம் ஆனால் நம்பிக்கை இழக்கக்கூடாது- ஜஸ்மின் சூக்கா!

You are currently viewing நீதிக்கான போரில் காலம் எடுக்கலாம் ஆனால் நம்பிக்கை இழக்கக்கூடாது- ஜஸ்மின் சூக்கா!

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்களுக்கான நீதியை பெறுவதற்கு காலம் எடுக்கலாம். ஆனால் நீதிக்கான போரில் நாம் எமது நம்பிக்கையை இழக்க கூடாது என உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக செயற்திட்ட அமைப்பின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா (18.05.2020) வெளியிட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலிக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று நானும் எனது நண்பர்களும் உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக செயற்திட்ட அமைப்பு சார்பில் அங்கு இறுதிப் போரில் மரணித்த பல பத்தாயிரம் மக்களுக்கு அஞ்சலிகளை செலுத்துகின்றோம். மேலும் போரில் உயிர்தப்பியவர்களுக்கும், காணமல் போனவர்களின் உறவுகளுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

போர் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நாம் அங்கு கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை கணக்கிட முடியவில்லை. கடந்த சில வருடங்களாக காணமால் போனவர்கள் தொடர்பில் போராட்டங்களை நடத்தி வருபவர்கள் சிறீலங்காவில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமது பாதுகாப்பில் இருந்தவர்கள் பலவந்தமாக காணாமல் போனபோதும் சிறீலங்கா அரசு அதனை தொடர்ந்து மறுத்து வருகின்றது. நாம் காணாமல்போனவர்களின் தகவல்களை மட்டும் சேகரிக்கவில்லை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களையும் சேகரித்து வருகின்றோம். எனவே இதற்கு பொறுப்பானவர்கள் ஒரு நாள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

கடந்த சில வருடங்களில் நாம் இந்த குற்றங்களை மேற்கொண்டவர்களை இனங்கண்டு உறுதிப்படுத்தியுள்ளோம். ஆனால் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை, எனினும் சிலருக்கு எதிராக பயணத்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக பதவியேற்ற சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா தன்னை சுற்றி போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படை அதிகாரிகளை அதிகாரத்தில் வைத்திருப்பது தொடர்பில் நாம் அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.

சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்ட படைத்துறை அழுத்தங்கள் தற்போது இவரின் ஆட்சியில் சட்டபூர்வமானதாக மாற்றம் பெற்றுள்ளது. கோவிட்-19 நிலைமையை பயன்படுத்தியும் சிறீலங்கா அரசு தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை இனங்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.

சிறீலங்கா அரசு மேற்கொண்ட குற்றங்களுக்கான நீதியை பெறுவதற்கு காலம் எடுக்கலாம். ஆனால் நீதிக்கான போரில் நாம் எமது நம்பிக்கையை இழக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள