கனடா தொடர்ச்சியாக ஹமாஸின் தாக்குதல்களை கண்டித்தாலும், நீதியின் விலை பாலஸ்தீனிய குடிமக்களின் தொடர்ச்சியான துன்பமாக இருக்க முடியாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையேயான போர் 4 வாரங்களாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா, உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் கனடா தொடர்ச்சியாக ஹமாஸை கண்டித்து வருகிறது. இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காஸாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதால் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘காஸாவில் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், பேரழிவு தாக்கத்தால் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
மேலும் உதவி வழங்கப்படுவதற்கு மனிதாபிமான இடைநிறுத்தங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் விடுவிக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரை மற்றொரு பதிவில், ‘கனடா ஹமாஸின் வெறுக்கத்தக்க பயங்கரவாதத்தை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்து வருகிறது, மேலும் தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் நீதியின் விலை பாலஸ்தீனிய குடிமக்களின் தொடர்ச்சியான துன்பமாக இருக்க முடியாது’ என கூறியுள்ளார்.