நீ காட்டிய திசைகள் வெளிக்கும்!!!

You are currently viewing நீ காட்டிய திசைகள் வெளிக்கும்!!!

 

பன்னிருநாள்
நீராகாரமின்றி
நீயிருந்தாய்!
கண்ணிருந்தும்
குருடராய்
காந்தி தேசம்
நின் முன்னே
வன் முகம் நீட்ட
உன் இனத்திற்காய்
உண்ணா நோன்பிருந்தாய்!
உடல் சுருண்டு
நாவறண்டு
மெழுகாய்
உருகி நின்றாய்!

மக்கள் புரட்சி
வெடிக்கட்டும்
சுதந்நிர தமிழீழம்
மலரட்டும் என்றாய்!
மக்கள் திரண்டனர்
உன்முன்னால்
விழிசொரிந்து
உன் உயிர் வலியில்
கலந்தனர்!

தமிழர்கள்
பயங்கரமானவர்
எனும் பழிசுமத்தியவர்
பாத்திருக்க
பார்த்தீபனே
அறவழியில்
ஐந்தம்ச கோரிக்கையை
முன்வைத்தாய்!
தமிழரின்
தார்மீக
உரிமையை
உலகிற்கு
எடுத்துரைத்தாய்!

எள்ளளவும்
இறங்காத
மனிதம் கண்டு
மருத்துவத்தை
அடியோடு
நிராகரித்தாய்!
இறுதிவரை
கொண்ட கொள்கையில்
குலையாது
நின்றாய்!

கொள்கை வீரனாய்
உள்ளமெல்லாம்
உரமேற்றி
உணர்வெல்லாம்
உன்கனவேற்றி
எம்மனவானில்
விடுதலைப்பறவையாய்
சிறகசைத்து
பறக்கின்றாய்!

நீ மூட்டிய தியாகம்
வீண் போகாது!
நீ காட்டிய திசை
கரையேறாது போகது!

உன்னைப்போல் ஒருவன்
இவ்வுலகத்தில்லை!

மண்ணிற்காக உயிர் உருக்க
இனியொருவன்
பிறக்கப்போவதுமில்லை!

அண்ணைத்தாய்
வளர்த்தெடுத்த பிள்ளையடா நீ!

அதனாலேதான்
மண்ணைக் கண்ணாக நினைத்தாய்!

எண்ணமெல்லாம்
எதிர்காலச் சந்ததிகளின்
வாழ்வை அடுக்கினாய்!

அதற்காக உன் உயிரையே
உழியாலே சிலையாக்கி
பன்னிரு நாள் நீராகாரமின்றி
அறப்போரினை செதுக்கினாய்!

அந்த அழகான ஓவியம் சாகவில்லை!
இன்னும் அடிவானின் ஒளியாகி நிற்கிறது!

நீ காட்டிய திசைகள் வெளிக்கும்!
அன்று தீராதா இருட்டு
சுக்கு நூறாக வெடிக்கும்!

-தூயவன்-

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply