நெஞ்சங்களில் நிறைந்தவரே…..
நினைவுகளால் தொழுகின்றோம் !
கார்பொழியும் கார்த்திகையில்
கைதொழுது நிற்கின்றோம்.
ஊர்நினைவு உள்வாட்ட
உம்நினைவைச் சுமந்துள்ளோம்.
பார்முழுதும் சேர்ந்து எம்மைப்
படைதிரட்டி வதைத்தபோதும்
வேர்காத்து விழிமூடி மண்ணில்
வித்தானீர் எம் வீரச் செல்வங்களே!
ஈனநிலைகண்டு நீரெழுந்தீர்
ஈழமண்விடிந்திட உயரீந்தீர்
வானத்தில் விண்மீன்களாகியே
வரலாறொன்றைப் படைத்திட்டீர்
கூனல்நிமிர்த்தி எழவைத்தீர்
கொற்றவைத்தாயை குளிரவைத்தீர்
தானத்திலே பெருந்தானமாயுயிர்
தந்துசென்றீர் தங்கங்களே!
விடுதலையில் விருப்புக்கொண்டீர்
வீரமிலா வாழ்வை ஒறுத்தீர்
குடும்பங்களை விட்டுவந்தீர்
கொள்கையிலே நிலைத்திருந்தீர்
துடுக்கடக்கிப் பகைவர்தந்த
துயரங்களை வென்றுவந்தீர்
முடுக்கிவிட்டு விடுதலைத்தீ
மூலையெங்கும் பற்றவைத்தீர்!
பிஞ்சுகளை அழித்துவிட்டுப் பின்
பொய்யுரைத்தார் பகைவர்
அஞ்சியுயிர்வாழ்தல் மனிதருக்கு
அழகில்லை என்றுரைத்தீர்
துஞ்சாமல் துடித்தெழுந்து
தோளுயர்த்திச் சென்றீர்
நெஞ்சுக்குள் காக்கின்றோம்
நினைவுகளால் தொழுகின்றோம்!
காலம் உணர்ந்து கடமைகளேற்று
காவலரண்களில் காத்திருந்தீர்
ஆலம்அணிந்து அணி திரண்டீர்
அன்னைத்தமிழுக்கு அரண்களானீர்
ஞாலம்வியக்க நற்பணிசெய்து
நம்நாடு தனைக் காத்தீர்
ஒலமிட்டேபகை ஓடிடும்படி
உணர்வுகள் கொண்டிருந்தீர்!
அன்னைமண்பறித்திட ஆசைகொண்டோரை
அடித்தேநீர் கலைத்தீர்
மின்னிடுமெங்கள் பேரொளிதன்னை
மேன்மைகள் கொள்ள வைத்தீர்.
தன்னலம்துறந்து தாய்நிலம்காத்து
தரணியில் நீர்நிலைத்தீர்
நின்னுயிர்தந்து மன்னுயிர் போற்றி
நினைவுகளில் நிறைந்தீர்!
ஆணும்பெண்ணும் அறிவினில்ஒன்று
ஆளுமை அதுவென்றீர்
பேணிக்கலைகளை போற்றிவளர்த்துப்
பெரும்பணி நீர்செய்தீர்
பேணுநல்லறம் பெரிதென்றெண்ணிப்
பெரிதுவந்து மண்காத்தீர்
காணுவதெல்லாம் இன்றெம்மனதில்
கண்ணீராகிறதே!
மண்பறிபோகுது எங்களினத்தின்
மாண்புகள் சாயுது மனமதுபதறுது
புண்பட்டுப் பொறுமையின்றிப்
புரண்டழுகின்றோம்
பண்பாடு மாள்கிறது கொடியோர்
கண்பட்டுப் போனதுவோ
எண்ணித் துடிக்கிறோம்
எம்மானம் காத்தமாவீர்களே!
தருமத்தின் வாழ்வு சூதாய்த்
தாண்டவம் ஆடும்போது எம்
தங்கங்களே எம் தலைமுறைக்கு
வழிகாட்ட வாருங்கள்
நீர் வாழ்ந்த நிலத்திலின்று
நிம்மதியோ துளியுமில்லை
போரில்லை ஆனாலும்
பெருகிக் கிடக்கிறது பெருந்துயரம்
இறகுகள் முளைத்துவிட்ட
இளையதலைமுறை என்ன செய்யும்
பருவத்தில் அவை புறப்படவேண்டும்
பறப்பதற்கு பாதைசொல்ல யாருண்டு
குற்றம் சொல்லாமல் கொண்டுசென்று
கற்றுத்தருவதற்கு எவருண்டு
உங்கள் ஈகங்களை உரத்தொலிப்போம்;
சென்றவர்கள் செவிகளிலே நுழையட்டும்.
வழித்தடம் தந்து சென்றீர்
வாழ்வெலாம் கலந்து நின்றீர்
இழிவுறு நிலையை மாற்றி
இனமதை ஏற்றி விட்டீர்
பழித்திட்;ட பகைக்கு முன்னே
பழந்தமிழ் வீரம் சொன்னீர்
அழிவுறா துங்கள் வீரம்
ஆழமாய் ஊன்றி வாழும்!
விதைந்த எம் வித்துக்களே
வீணல்ல உங்கள் சாவு
புதைக்கவில்லை உம்மை எம்முள்
பதித்துத்தான் வைத்துள்ளோம் உண்மை
சிதைத்திட முடியா தெங்கள்
சிந்தையின் செல்வமானீர்
வதைந்திட மாட்டோம் நாங்கள்
வளர்தமிழ் ஈழம் கொள்வோம்.
-ஆதிலட்சுமி சிவகுமார்.