நெஞ்சை விட்டு அகலாதே..
நெஞ்சம் அடைக்கும்
நினைவுகளின் பேரலையாய்
வஞ்சம் நடந்தேறிய
கொடும் துயரத்தின்
வடுக்களை இதயத்தின்
இடுக்குகளில்
தாங்கிய வாறு
தமிழின அழிப்பு நாள்!
விடுதலை என்ற
பெரு இலட்சியத்திற்காய்
சுடுகலன் சுமந்தவரின்
நெறிபுரளாக் கொள்கைப்
பிடிப்பினை
நாடி நாளங்களில்
ஓடித்திரியும்
குருதிச்சுற்றோட்டத்தின்
சூடுதணியா
உணர்வுகள்
வெளிப்படுத்தியவாறு
தமிழின அழிப்பு நாள்!
காட்டிக்கொடுப்பும்
காலை வாருதலும்
சேறு பூசுதலும்
ஊற்றெடுக்கும்போதெல்லாம்
நாற்றுமேடைகளின்
வீரியத்தின் விளைச்சல்
ஆற்றுப்படுத்தி
அணைத்தபடி
மண்ணின் காதலை
கசிய வைக்கிறது
தமிழின அழிப்பு நாள்!
மானத்தமிழனின்
மண்டையை பிளந்த வலிகளாய்
இன அழிப்பின் இரணங்கள்
இதயத்தில் ஆள வேரோடி
இருக்கவேண்டும்!
அப்போதுதான்
கூனிக்கிடக்காத நிலையில்
தமிழன் முதுகள்
நிமிர்ந்து நிற்கும்!
ஈனப்பிறவிகளின்
நாணல் முதுகளையும்
கூர்வாளாய் நறுக்கும்!
மே18இல்
ஆடிப்பாட நினைப்பவன்
தமிழனாக இருக்கமாட்டான்!
தன்மான நிறைவோடு இருக்கமாட்டான்!
விட்டுக்கொடுக்காத
விடுதலை அரசியலில்
இதுவும் ஒன்றுதான்!
அற்ப ஆசைகளுக்காகவும்
பாசப்பிணைப்புகளுக்காகவும்
தேச நினைவுகளை
விட்டு விலகுவதும்
கட்டுக்கடங்காத ஆசைகளில் ஒன்றுதான்!
சாவுகளும்
வலிகளும்
உள்ளத்தினை
உண்மையில்
தொட்டு வலிக்குமாக
இருந்தால்
கொண்டாங்களிலும்
குதூகலிப்புகளிலும்
விட்டு விலகி
விடுதலை
உணர்வோடு
ஒன்றித்து நில்!
அதுவே
ஒற்றுமை
ஓர்மையின்
குரல்!!
✍️தூயவன்