ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (08) உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது, ”எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன. பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்.
மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அஜாக்ஸ் மற்றும் இஸ்ரேலிய கால்பந்து கழகமான மக்காபி டெல் அவிவ் (Maccabi Tel Aviv) இடையேயான யூரோபா லீக் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நேற்று (7) மாலை கலவரம் வெடித்தது.
இஸ்ரேலிய ரசிகர்கள் பாலஸ்தீன ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்போது, இஸ்ரேலியர்கள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மூன்று இஸ்ரேலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, வன்முறை தொடர்பில் 62 பேர் கைது செய்யப்பட்டதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.