இவ்வாண்டு இரண்டாவது தடவையாக அனைத்துலக இளையோர் அமைப்பின் 2025 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள், ஆரம்ப நிகழ்வுகளுடன் உள்ளரங்க உதைபந்தாட்டப்போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆரம்பநிகழ்வாக, அனைவரும் அணிவகுத்து அணிநடையில் மரியாதை செலுத்த, பொதுச்சுடரேற்றலை நெதர்லாந்துக்கிளைப்பொறுப்பாளர் திரு. ஜெயா அவர்கள் ஏற்றியபின், தமிழீழத்தேசியக்கொடியினை அனைத்துலகத் தொடர்பக விளையாட்டுத்துறை இணைப்பாளர் திரு. ரங்கன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
இதனைத்தொடர்ந்து, அங்கு விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் பொதுப்படத்திற்கு பெல்சியக்கிளைப்பொறுப்பாளர் திரு. நாதன் அவர்களும் தமிழீழ மாணவர் அமைப்பின் ஆரம்பகாலப் பொறுப்பாளர், மாவீரர் மேஜர் முரளி அவர்களின் திருவுருப்படத்திற்கு யேர்மன்கிளை துணைப்பொறுப்பாளர் திரு. சங்கர் அவர்களும் சுடர்களை ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து, மலர்மாலைகளை மாவீரர் பொதுப்படத்திற்கு யேர்மனி தமிழ் இளையோர் துணைப்பொறுப்பாளர் செல்வி. வானதி, நெதர்லாந்து தமிழ் இளையோர் பொறுப்பாளர் செல்வி. துயானி அவர்களும் அணிவிக்க, மாவீரர் மேஜர் முரளி அவர்களின் படத்திற்கு பெல்சியக்கிளையின் ஆவணப்பகுதிப் பொறுப்பாளர் திரு. கர்ணா மற்றும் விளையாட்டுத்துறைச் செயற்பாட்டாளர் திரு ஆனந்தன் அவர்களும் அணிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, நெதர்லாந்துக்கிளை விளையாட்டுத்துறைச் செயற்பாட்டாளர் திரு. கிருபா அவர்கள் மலர்வணக்கம், சுடர்வணக்கங்களை ஆரம்பித்துவைக்க, அங்கு வந்திருந்த பன்னாட்டு தமிழ் இளையோர் அமைப்புச்செயற்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள், பன்னாட்டுச் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என, அனைவரும் மலர்வணக்கத்துடன் இன்றைய போட்டியான உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நேற்றும் இன்றும் இருநாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில், நேற்று உதைபந்தாட்டப் போட்டிகளில் 23 கழகங்களாவன, பிரித்தானியா, சுவிஸ், யேர்மனி, பெல்சியம், நெதர்லாந்து நாடுகளிலிருந்து பங்குபற்றுகின்றன.
தொடர்ந்து, அகணக்கம் அனைவராலும் செலுத்தப்பட, வரவேற்புரையினை, திரு. ரங்கன் நிகழ்த்தி, முதல்நாளான நேற்றையநாள் உதைபந்தாட்டப்போட்டிகளை அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மேலும் இன்று ஞாயிறன்று கரப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கிளித்தட்டுப்போட்டிகள் ஆண்கள், பெண்களிற்காக நடைபெற்று வருகின்றன.
அத்துடன் போட்டி மண்டப வாயிலில், ஈழத்தின் தமிழர் வரலாற்றையும் தமிழீழபோராட்டத்தின் நியாயத்தன்மையை உண்மையான ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகின்ற பதாகைகள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையும் தாயகத்தையும் தேசியச்சின்னங்களிற்கும் அங்கு வந்திருந்த சிறுவர்கள் வர்ணம் தீட்டும் வெளிப்பாட்டையும் இளையோர் அமைப்பினர் முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற உதைபந்தாட்ட முடிவுகள்
1 ம் இடம் – நெதர்லாந்து YMTA
2 ம் இடம் – பெல்சியம் இளம்புயல்
3 ம் இடம் – நெதர்லாந்து TFC ரொத்தர்டாம்