“கொரோனா” பரவலின் பிரதிபலனாக நோர்வே மிகுந்த நெருக்கடி நிலைமைக்குள் சென்றுகொண்டிருப்பதாக, பிரதமர் “Erna Solberg” அம்மையார் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், “கொரோனா” பரவலை தடுப்பதற்கான தகுந்த வழிவகைகளை அதிகாரிகள் நேரகாலத்துடன் எடுக்க தவறிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாட்டின் நிர்வாகத்துறையிலுள்ள அனைவருமே பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஆயுதப்போரொன்று ஏற்படுத்தக்கூடிய மோசமான நெருக்கடி நிலைமைகளை விடவும் அதி மோசமான நிலையை “கொரோனா” பரவல் ஏற்படுத்தி விட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர், நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்ப முதல், நாடு மிக மோசமானதொரு நிலைக்கு செல்வதை தடுக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நெருக்கடியான நிலைமையை சமாளிப்பதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்து கைகோர்த்து பயணிக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர், நெருக்கடி நிலைமையிலும், மக்கள் பணிகளில் அயராது உழைத்துவரும் அனைத்து துறைகளைச்சேர்ந்த பணியாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.