நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் திருமணபந்தத்தை செய்துகொள்வதற்கு சட்டபூர்வமாக தடை விதிக்கப்பட வேண்டுமென நோர்வே காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பூர்வீக நோர்வே மக்களிடம் இம்முறைமை இல்லையென்றாலும், நோர்வேயில் குடியேறி வாழும் தென்னாசியப்பிராந்தியங்களை சேர்ந்த மக்களிடம் இம்முறைமை இன்றும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நெருங்கிய குடும்ப உறவுகளிடையே திருமணபந்தம் வைத்துக்கொள்வதால், பிறவிக்குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதாக அறிவியல் பூர்வமாகவும், மருத்துவ ரீதியிலும் நிருபிக்கப்பட்டுள்ள போதிலும், தென்னாசிய பிராந்தியங்களை பூர்வீகமாக கொண்டு, நோர்வேயில் குடியேறி வாழும் மக்களிடையே இம்முறைமை தெடர்ந்தும் கடுமையாக கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
குடும்பங்களின் பூர்வீக சொத்துக்கள் வெளியாரிடம் போய்விடக்கூடாது என்ற எண்ணம்; குடும்பங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது; பொருளாதார நிலைமைகளில் பின்தங்கியிருக்கும் குடும்பங்கள், சீதனம் கொடுக்கும் வசதியை கொண்டிராமை உள்ளிட்ட காரணங்கள் இம்முறைமைக்கு சொல்லப்பட்டாலும், நோர்வேயை பொறுத்தவரை பெரும்பாலான “கௌரவக்கொலைகள்” நெருங்கிய குடும்ப உறவுகளுக்கிடையிலேயே நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவும், குடும்ப கௌரவத்துக்காகவும் நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்பவர்கள், பின்னாளில் விருப்பமில்லாத திருமண உறவு கசக்கும் நிலையில் இத்திருமண பந்தத்திலிருந்து விடுபடும்போது “கௌரவக்கொலைகள்” இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான திருமண பந்தங்களை சட்ட ரீதியாக தடை செய்யக்கோரும் வேண்டுகோளை நோர்வே காவல்துறை, நோர்வேயின் அரச சட்டவாளரிடம் கையளித்துள்ளதாகவும், இக்கோரிக்கைக்கு, தென்னாசிய நாடொன்றை பூர்வீகமாக கொண்டிருக்கும் நோர்வேயின் கலாச்சார அமைச்சர் “Abid Q Rajah” ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நோர்வேயின் தொழிலாளர் கட்சியினரால் (Arbeiderpartiet) இந்த யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கான போதிய ஆதரவு கிடைக்காத நிலையில் அப்போது அது கைவிடப்பட்டிருந்ததாகவும், எனினும் இப்போது நோர்வே காவல்துறை அதை மீண்டும் கையிலெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதென தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.
எனினும், திருமண பந்தத்தை யார்யாரோடு வைத்திருக்க வேண்டுமென்பதை முடிவு செய்வதென்பது அவரவரது தனிப்பட்ட உரிமை என தெரிவித்து, இம்முறைமையை இன்றும் தீவிரமாக கடைப்பிடிக்கும் தென்னாசிய நாடுகளை சேர்ந்த மக்களின் அமைப்புக்கள் மேற்படி காவல்துறையின் வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.