நேட்டோவிலிருந்து துருக்கியை வெளியேற்றுங்கள்! அமெரிக்க நிபுணர்!!

You are currently viewing நேட்டோவிலிருந்து துருக்கியை வெளியேற்றுங்கள்! அமெரிக்க நிபுணர்!!

நேட்டோ கூட்டமைப்பிலிருந்து துருக்கியை வெளியேற்றவேண்டுமென அமெரிக்க இராணுவ நிபுணரான “John Bolton” தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர்களான “George W Bush”, மற்றும் “Donald Trump” போன்றவர்களின் ஆட்சிக்காலத்தில், அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய இவர், அமெரிக்கா உலகம் முழுவதும் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைளிலும் ஆலோசகராக கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவீடன் தொலைக்காட்சியொன்றுக்கு செவ்வியளித்த “John Bolton”, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைந்துகொள்வதை துருக்கி தடுப்பதை கடுமையாக சாடியுள்ளதோடு, துருக்கி ரஷ்யாவிடமிருந்து வான்பாதுகாப்பு ஆயுதத்தொகுதியை வாங்கியுள்ளதாகவும், இவ்வாயுதத்தொகுதி, ஏற்கெனவே பாவனையிலுள்ள நேட்டோவின் வான்பாதுகாப்பு ஆயுதத்தொகுதியோடு இணக்கமாக செயற்படக்கூடியதல்ல எனவும், துருக்கியில் பொதுமக்கள் துருக்கிய அரசினால் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள் எனவும் குறிப்பிட்டு, மேற்கூறிய காரணங்கள், துருக்கியை நேட்டோவிலிருந்து நீக்க போதுமானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியை நேட்டோ கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்தவோ, விலக்கி வைக்கவோ முடியுமென தான் நம்புவதாக மேலும் தெரிவித்துள்ள அவர், இதுவிடயத்தில் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில், நேட்டோ கூட்டமைப்பை கலைத்து விட்டு புதிதாக அமைத்துக்கொள்ள முடியுமெனவும், அப்போது துருக்கியை இணைத்துக்கொள்ளாமல், வேறு புதிய நாடுகளை இணைத்துக்கொள்வதில் சிக்கல்கள் இருக்காதெனவும் கருத்துரைத்துள்ளார்.

எனினும், இது பற்றி கருத்து தெரிவித்த சுவீடனின் பாதுகாப்புத்துறை நிபுணரொருவர், மேற்படி”John Bolton” இன் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதானது, நேட்டோ மீதிருக்கும் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கிவிடுமென எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply