சிரியாவில் அசாத் தலைமையிலான ஆட்சி ஒழிக்கப்படும் முன்னர், கிளர்ச்சியளார்களுக்கு துருக்கி ஆதரவளிப்பதாக அசாத் ஈரானிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ஈரானிய அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ள தகவலில், அசாதின் ஆட்சியை கவிழ்க்க சன்னி கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி தீவிரமாக ஆதரவளித்து வருவதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சரிடம் அசாத் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
50 ஆண்டுகள் நீடித்த அசாத் குடும்பத்தின் ஆட்சியானது கிளர்ச்சியாளர்களால் கடந்த ஞாயிறன்று முடிவுக்கு வந்தது. சிரியாவில் இருந்து தப்பிய அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.
சிரியாவின் நீண்ட கால உள்நாட்டுப் போரில் அசாத்தை ஈரான் ஆதரித்தது. ஆனால் அவர் தூக்கியெறியப்பட்டது ஈரானுக்கு அது பேரிடி என்றே கூறப்படுகிறது. முன்பு அல் கொய்தாவுடன் இணைந்து செயபட்ட Hayat Tahrir al-Sham என்ற கிளர்ச்சியாளர்கள் படை முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகரை நோக்கி முன்னேறியது.
இந்த நிலையில் டிசம்பர் 2ம் திகதி அன்று அசாத் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியை டமாஸ்கஸில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, அவரை பதவி நீக்கம் செய்ய துருக்கி தீவிர முயற்சிகள் முன்னெடுப்பதாக அவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அசாதுக்கு அமைச்சர் அராக்ச்சி உறுதி அளித்துள்ளார். மறுநாள், அராக்ச்சி துருக்கிய வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் ஃபிடானை சந்தித்து, கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றங்களுக்கு துருக்கியின் ஆதரவு குறித்து ஈரானின் ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி புதன்கிழமை தெரிவிக்கையில், அசாதின் ஆட்சி கவிழ்ப்பு என்பது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டத்தின் விளைவு என்று கூறினார்.
மட்டுமின்றி, சிரியாவின் அண்டை நாடுகளில் ஒருவருக்கும் பங்கு இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் கூறினார். அவர் நாட்டின் பெயரை குறிப்பிடவில்லை, ஆனால் துருக்கியை குறிப்பிடுவதாகவே பேசப்படுகிறது.