போலந்திலிருந்து நோர்வேக்கு வரவேண்டிய பல மில்லலியன் குரோணர்கள் பெறுமதியான «Antibacterial» நுண்கிருமி கொல்லிகளை போலந்து தடுத்து நிறுத்தியுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
“கொரோனா” பரவலால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் நோர்வேயில், மேற்படி கிருமிகொல்லியின் தேவை அதிகளவில் இருக்கும் நிலையில், இக்கருமி கொல்லிகள் தமக்கு தேவையென காரணம் காட்டிய போலந்து அதிகாரிகள், நோர்வேக்கு அனுப்பப்படவிருந்த ஒரு தொகுதி கிருமிகொல்லிகளை தடுத்து வைத்துள்ளனர்.
போலந்தின் இச்செயலை மனிதாபிமானமில்லாததென வர்ணித்திருக்கும் எதிர்க்கட்சியொன்றின் தலைவரான “Trygve Slagsvold Vedum” வருடாந்தம் நோர்வே போலந்துக்கு வழங்கிவரும் 1.3 பில்லியன் குரோணர்கள் பொருளாதார உதவியை நிறுத்தி வைக்கும்படி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நோர்வே உறுப்புநாடாக இல்லாவிட்டாலும், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விதிகளை பின்பற்றி நடப்பதால், அந்த வர்த்தக விதிகளுக்குட்பட்டே நோர்வேயிடமிருந்து போலந்து 1.3 பில்லியன் குரோணர்களை பொருளாதார உதவியாக பெற்றுக்கொள்கிறது எனவும் குறிப்பிட்ட அவர், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விதிகளை மீறும் விதமாக போலந்து நோர்வேக்கு வரவேண்டிய நுண்கிருமி கொல்லிகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும், அதனால், போலந்துக்கு தரப்படும் வருடாந்த பொருளாதார உதவிகளை நோர்வே நிறுத்தி வைப்பதில் தவறில்லை எனவும் தெரிவித்துள்ளார்.